கொரோனா 3வது அலை கணிக்க முடியாதது: கவனம் தேவை: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை

டெல்லி: கொரோனாவின் மூன்றாவது அலை கணிக்க முடியாததாக உள்ளது. எனவே கவனமாக இருக்க வேண்டும் என்கிறார் எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர். மூன்றாவது அலை வந்தால் குழந்தைகளை அதிகம் தாக்கும் என்று சொல்லப்பட்டு வரும் வேளையில் இதன் உண்மை தன்மை குறித்து பார்க்கலாம்.

லான்செட் கோவிட் 19 இந்தியா டாஸ்க் ஃபோர்ஸ் கமிஷன் என்கிற அமைப்பு நாடு முழுவதும் உள்ள முக்கிய குழந்தைகள் நல மருத்துவர்களுடன் கலந்தாலோசித்தது. தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10 வயதிற்கும் குறைவான 2500க்கும் மேற்பட்ட குழந்தைகளின் மருத்துவ அறிக்கை மற்றும் மாதிரிகளை பரிசோதித்து ஆய்வு ஒன்றை வெளியிட்டது.

இதன்படி குழந்தைகளின் இறப்பு 2.4 % மட்டுமே என்றும் இதில் 40 % குழந்தைகள் மனவளர்ச்சி குன்றிய சிகிச்சைகளுக்கு சரியாக ஒத்துழைக்க முடியாத குழந்தைகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 5 சதவீதத்திற்கும் குறைவான குழந்தைகளுக்கு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கும் வகையில் 3வது அலை இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.

ஆயினும் 3வது அலையால் குழந்தைகள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள் என்பதற்கான தரவுகள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இதற்கிடையே 18 வயதிற்கு கீழான குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான ஆய்வுகளை பீகார் மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகங்கள் தொடங்கி இருக்கின்றன. இந்த தடுப்பூசியின் சோதனைகள் அடுத்த மாதம் மேற்கொள்ளப்பட உள்ளன.

5 வயது முதல் 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி தயாரிக்கும் பணிகளை சைடஸ் காடிலா நிறுவனம் மேற்கொடுள்ளது. ஏற்கனவே 12 - 16 வயதான குழந்தைகளுக்கு அமெரிக்கா, ஜெர்மனில் பைசர் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. இதற்கான சோதனைகள் பிரிட்டனில் நடைபெற்று வருகிறது. போலந்து, ஹங்கேரி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் அடுத்த சில வாரங்களில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்க உள்ளன. சீனா ஏற்கனவே 3 முதல் 17 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆபத்து காலத்தில் வழங்குவதற்காக சினோபார்ம், சினோவேக் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

தடுப்பூசிகள் விவகாரத்தில் இவ்வளவு முன்னெடுப்புகள் செய்யப்பட்டாலும் அதற்குள் 3வது அலை இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கிவிட்டால் அதனை சமாளிக்க மாநில அரசுகள் தயாராக இருக்குமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

Related Stories: