சென்னையில் ரூ. 54.25 கோடி மதிப்பீட்டில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணிகள் குறித்து அமைச்சர் அன்பரசன் நேரில் ஆய்வு !

சென்னை: தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் சென்னை - துறைமுகம் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட கல்யாணபுரம் திட்டப்பகுதியில் ரூ. 54.25 கோடி மதிப்பீட்டில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணியினை ஊரக தொழில்துறை அமைச்சர் அன்பரசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டுள்ளார். தமிழ்நாடு  குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கல்யாணபுரம் திட்டப்பகுதியில் உள்ள 254 சிதிலமடைந்த பழைய குடியிருப்புகளை அகற்றி மறுகட்டுமான திட்டத்தின் கீழ் ரூ. 54.25 கோடி திட்ட மதிப்பீட்டில்  புதிய குடியிருப்புகள் கட்டும் பணிகளை இன்று ஊரக தொழில்துறை அமைச்சர் அன்பரசன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோருடன் இணைந்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

மேலும் துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பி. ஆர் என். கார்டன் திட்டப்பகுதியில் 96 குடியிருப்புகள், காமராஜர் காலனி திட்டப்பகுதியில் 16 குடியிருப்புகள் மற்றும் துறைமுகம் திட்டப்பகுதியில் 234 குடியிருப்புகளில் ரூ. 10.96 லட்சம் செலவில் பழுதுகளை நீக்க மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைக்கும் பணிகளையும், எல்லீஸ்புரம் திட்டப்பகுதியில் மறுகட்டுமானம் செய்யவுள்ள சிதிலமடைந்த 39 குடியிருப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது மாண்புமிகு ஊரக தொழில் துறை  அமைச்சர் திரு. தா. மோ. அன்பரசன் அவர்கள் செய்தியார்களிடம் தெரிவிக்கையில், மாண்புமிகு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால், “ஏழையின் சிரிப்பில் இறைவனைக்காண்போம்” என்ற உன்னத நோக்கத்துடன், தமிழகத்தை குடிசை இல்லாத மாநிலமாக மாற்றுவதற்காக  1970 ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிசைப்பகுதி  மாற்று வாரியம் உருவாக்கப்பட்டது என்றும், தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு தற்போது சிதிலமடைந்த நிலையில் உள்ள குடியிருப்புகளை அகற்றி நவீன தொழில்நுட்பத்துடன் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு, ஏற்கனவே, அதில் வசித்து வந்த குடியிருப்புதாரர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையினைப் பெற்று, வீடுகள் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், குடியிருப்புகள் கட்டும்  பணியினை நிர்ணயிக்கப்பட்ட கால வரம்பிற்குள் முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியதாக தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலர் திரு ஹிதேஸ் குமார் எஸ் மக்வானா, தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய மேலாண்மை இயக்குநர் திரு ம. கோவிந்த ராவ், முதன்மை பொறியாளர் இராம. சேதுபதி, கண்காணிப்புப் பொறியாளர்கள் சு. சுந்தர்ராஜ், அ.செல்வமணி, செயற்பொறியாளர்கள் எல். மனோகரன், என். செந்தாமரைக்கண்ணன், எஸ். சுடலைமுத்துக்குமார் உள்ளிட்ட வாரிய பொறியாளர்கள்  மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Related Stories: