மத்திய தொழில்துறை செயலாளர் குருபிரசாத் கொரோனாவால் உயிரிழப்பு

டெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை செயலாளர் குருபிரசாத் மொஹபத்ரா உயிரிழந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் மத்தியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குருபிரசாத் மூச்சுதிணறல் காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உடல்நிலையை மருத்துவ குழு ஒன்று கண்காணித்து வந்தது.

இந்நிலையில் இன்று காலை குருபிரசாத்தின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் கிடைக்காமல் குருபிரசாத் உயிரிழந்தார். குஜராத் மாநிலத்தில் இருந்து 1986ஆம் ஆண்டு ஐஏஎஸ் பணிக்கு தேர்வான குருபிரசாத் மொஹபத்ரா பல்வேறு துறைகளில் தனது சிறப்பான பணி மூலம் முத்திரை பதித்தவர். ஏஏஐ எனப்படும் இந்திய விமான நிலையத்தின் தலைவராக இருந்த குருபிரசாத் கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை செயலாளராக பொறுப்பேற்றார். குருபிரசாத் மறைவுக்கு தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>