சென்னையில் நீண்ட நாட்கள் தேங்கக்கூடிய திடக்கழிவுகளை அகற்ற ஒரு வாரகாலத்திற்கு தீவிர தூய்மை பணி : மாநகராட்சி ஆணையர் கன்தீப் சிங் பேடி

சென்னை  : பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நீண்ட நாட்கள் தேங்கக்கூடிய திடக்கழிவுகளை அகற்ற 21.06.2021  முதல் 26.06.2021  வரை ஒரு வாரகாலத்திற்கு தீவிர தூய்மை பணி நடைபெறவுள்ளது.  மாதந்தோறும் ஒருவாரக் காலத்திற்கு தீவிர தூய்மை பணி மேற்கொள்ளப்படும் என

முதன்மை செயலாளர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர்  திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளிலும் நாள்தோறும் சராசரியாக 5,000 மெட்ரிக் டன் குப்பை சேகரிக்கப்பட்டு குறிப்பிட்ட அளவு குப்பை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கப்பட்டு இயற்கை உரமாகவும் மற்றும் உயிரி எரிவாயுவாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், உலர்கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டு மறுஉபயோகத்திற்கும், மறுசுழற்சிக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தத் தூய்மைப் பணிகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் கடந்த மாதம் மாநகராட்சியின் சார்பில் தீவிர தூய்மைப் பணி தொடர்ந்து 10 நாட்கள் மேற்கொள்ளப்பட்டு நீண்ட நாட்களாக தேங்கியிருந்த 3,260 மெட்ரிக் டன் குப்பைகள் மற்றும் 10,085 மெட்ரிக் டன் கட்டிடக் கழிவுகள்என மொத்தம் 13,345 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்பட்டு அவ்விடங்கள் தூய்மையாக பராமரிக்கப்பட்டுள்ளன.  

    

தொடர்ந்து, நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் குப்பைகள் மற்றும் கட்டிடக் கழிவுகளை அகற்ற மாதந்தோறும் ஒருவாரக் காலத்திற்கு தீவிர தூய்மைப் பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் உள்ள 614 இடங்கள் கண்டறியப்பட்டு 21.06.2021  முதல் 26.06.2021  வரை ஒரு வார காலத்திற்கு தீவிர தூய்மைப் பணி நடைபெறவுள்ளது.

    

இந்த ஒரு வார காலம் நடைபெறவுள்ள தீவிர தூய்மைப் பணியின் மூலம் சுமார் 1000 மெட்ரிக் டன் குப்பைகள் மற்றும் 4500 மெட்ரிக் டன் கட்டிடக் கழிவுகள் அகற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே, மாநகராட்சியின் சார்பில் தீவிர தூய்மைப் பணிகளை கண்காணிக்க மண்டலங்களுக்கு அனுபவம் வாய்ந்த பொறியாளர்கள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.  இந்தக் கண்காணிப்பு அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மண்டலங்களில் மேற்கொள்ளப்படவுள்ள தீவிர தூய்மைப் பணிகளை நாள்தோறும் கண்காணித்து அவ்விடங்களை தூய்மையாக பராமரிக்க முதன்மை செயலாளர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர்  திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories: