×

எம்எல்ஏவாக இருந்த போது கரூர் பள்ளியில் கலைஞர் எழுதிய குறிப்பை டுவிட்டரில் பதிவிட்ட கலெக்டர்

கரூர்: கரூர் மாவட்ட கலெக்டராக பிரபு சங்கர் கடந்த 16ம் தேதி பொறுப்பேற்றார்.  நேற்று அவர் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் வேங்காம்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடந்த மருத்துவ முகாமை  பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுமக்களுக்கு எந்த வகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, காய்ச்சல், சளி உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கும் நபர்களுக்கு அடுத்தகட்ட மருத்துவ பரிசோதனைக்காக எடுக்கப்படும் நடவடிக்கை என்ன, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் இந்த பகுதியில் இருந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஆய்வு மேற்கொண்டார். மேலும் முகாமிற்கு வந்திருந்த பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கி, தானும் அருந்தினார்.

1959ம் ஆண்டு மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் குளித்தலை எம்எல்ஏவாக  இருந்தபோது இந்த பள்ளியில் ஆய்வு செய்தார். அப்போது அவர் பள்ளியில் ஒரு குறிப்பு எழுதி வைத்தார். அதில், இன்று வேங்காம்பட்டி ஆரம்ப பாட சாலையை பார்வையிட்டேன். இரண்டு ஆசிரியர்களும் இருந்தார்கள். மொத்த மாணவர்கள் 107ல், இன்று வருகை தந்திருந்தவர்கள் 71 பேர். இந்த பள்ளிக்கென கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடம் மேல் மரங்கள் உளுத்துப்போயிருக்கின்றன. அவை உடனடியாக கவனிக்கப்பட்டால் நலம். ஆசிரியர்கள் நன்கு பணியாற்றுவதாக பொது மக்கள் பாராட்டினார்கள். மாணவர்களின் சுகாதாரம் இன்னும் அதிகமாக கவனிக்கப்படுதல் நன்று. இவ்வாறு கருணாநிதி குறிப்பிட்டுள்ளார். கலைஞர் எழுதி வைத்த இந்த குறிப்பை கலெக்டர் பிரபு சங்கர், டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.



Tags : Twitter ,Karur ,School , Artist, Reference, Collector
× RELATED 2000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு அறுவடை பணிகள் தீவிரம்