அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை உயர்த்தும் விதமாக புதிதாக சேரும் மாணவர்களுக்கு தலைமையாசிரியர் ரூ.1000 பரிசு

விருதுநகர்: தமிழக பள்ளி கல்வித்துறை கடந்த 14-ந் தேதி முதல் பள்ளிகளை திறந்து மாணவர் சேர்க்கை, மாற்றுச் சான்றிதழ் வழங்கும் பணி, விலையில்லா பாட புத்தகம் வழங்கல் உள்ளிட்ட நிர்வாக பணிகளை தலைமை ஆசிரியர்களை கொண்டு நடத்த உத்தரவிட்டு இருந்தது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2021-22 கல்வி ஆண்டுக்கான 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கியது.

இந்த பள்ளியில் புதிதாக சேரும் அனைத்து மாணவர்களுக்கும் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் தனது சொந்த செலவில் ரூ.1000 வழங்கி வருகிறார். அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த ஆண்டு இந்த பள்ளியில் 1-ம் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு செல்போன்களை தலைமை ஆசிரியர் வாங்கி கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் கூறுகையில், அரசு பள்ளியில் படிக்கும் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் தமிழக அரசு, அரசு பள்ளியில் படிக்கும் மாணவ - மாணவிகளுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.

அரசு சலுகைகள் வழங்கி வரும் நிலையில் தன்னால் முடிந்த வி‌ஷயங்களை செய்து பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தி வருவதாகவும், கடந்த ஆண்டு செல்போன் கொடுத்த நிலையில் தற்போது ரூ.1000 கொடுத்து வருவதாகவும், இதனால் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி உண்டாவதால் இதனை தொடர்ந்து செய்து வருவதாக கூறினார். தலைமையாசிரியரின் இந்த செயல் சுற்றுவட்டார கிராம மக்களிடையே மகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

Related Stories:

>