இந்த ஆண்டு சீசனில் மாம்பழம் உற்பத்தி அதிகரிப்பால் விலை வீழ்ச்சி

*நெல்லையில் கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை

நெல்லை :  இந்த ஆண்டு மாம்பழ சீசனில் உற்பத்தி அதிகரிப்பால் விலை வீழ்ச்சி ஏற்பட்டு நெல்லையில் கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மே, ஜூன், ஜூலை மாதங்களில் மாம்பழ சீசன் இருக்கும். இம்மாதங்களில் பலவகை மாம்பழங்கள் பல்வேறு ஊர்களில் இருந்து கொண்டு வரப்பட்டு நெல்லையில் விற்பனை செய்யப்படும். இந்த ஆண்டு மாம்பழ சீசனில் உற்பத்தி அதிகரித்திருப்பதால் விலை வீழ்ச்சி ஏற்பட்டு நெல்லையில் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை வீழ்ச்சிக்கு கொரோனா ஊரடங்கும் ஒரு காரணம். கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழகத்தில் ஒரு ஆண்டையும் கடந்து ஊரடங்கு விதிமுறைகள் தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. தொற்று பரவல் குறைவதைப் பொறுத்து, அரசு ஊரடங்கில் தளர்வுகளை அளித்து வருகிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடைகளைக் காட்டிலும் ஆட்டோ   உள்ளிட்ட தள்ளுவண்டிகள் மூலம் தெருக்களில் மாம்பழம் சில்லறை விற்பனையே அதிகரித்து காணப்படுகிறது. நெல்லையில் தெற்கு பைபாஸ்,  வடக்கு பைபாஸ், பாளை மார்க்கெட் பகுதி, சமாதானபுரம், டவுண், தச்சநல்லூர், நெல்லை சந்திப்பு, மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மினி டெம்போ, தள்ளுவண்டிகளில் வைத்து ஒரு கிலோ  ரூ.50, 3 கிலோ ரூ.100 என்று சில்லறைக்கு மாம்பழங்கள் விற்கப்பட்டு  வருகிறது.  

இதுகுறித்து நெல்லை பழ வியாபாரி தங்கராஜ் கூறுகையில், மாம்பழங்களில் கிளி மூக்கு, மல்கோவா, செந்தூரம், நீலம், சப்பட்டை, இமாம், அல்போன்சா உள்ளிட்ட பலவகை மாம்பழங்களை கயத்தாறு கூட்டுப்பண்ணை, கருங்குளம், களக்காடு, திருமலைக்கோவில், தென்காசி, ராஜபாளையம், வில்லிபுத்தூர், திண்டுக்கல், சேலம் மற்றும் ஆந்திரா ஆகிய பகுதிகளில் இருந்து மொத்தமாக வாங்கி வந்து நெல்லையில் சில்லறை வியாபாரிகள் மற்றும் கடைக்காரர்களுக்கு விற்பனை செய்து வருகிறோம். ஒரு கிலோ கிளிமூக்கு ரூ.15, சப்பட்டை ரூ.30, அல்போன்சா ரூ.60, இமாம் ரூ.80 என்ற விலையில் வியாபாரிகளுக்கு கொடுக்கிறோம்.

அவர்கள் இந்த மாம்பழங்களை வாங்கிச் சென்று வெளியில் ஒரு கிலோ கிளிமூக்கு ரூ.50, சப்பட்டை ரூ.60, அல்போன்சா ரூ.100, இமாம் ரூ.120 வரை சில்லறை விலைக்கு விற்பனை செய்கின்றனர். மாம்பழ உற்பத்தியும், பழங்களின் வரத்தும் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகரித்துள்ளதால் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. விலை குறைந்தபோதும் கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது இந்த ஆண்டு விற்பனை குறைவாகவே உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories:

>