பார்சல் சேவையில் உறைகளை எச்சில் தொட்டு எடுத்தல், வாயால் ஊதுதல் போன்ற செயல்பாட்டில் ஈடுபடக்கூடாது : மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவிப்பு

சென்னை :  உணவகங்களில் பார்சல் சேவையின் போது, கொரோனா தடுப்பு விதிகள் கடைபிடிக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை :

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25.03.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.மார்ச் 2021 முதல் தமிழ்நாட்டில் நோய் தொற்றின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களை அவ்வப்போது கலந்தாலோசித்து அரசு ஊரடங்கினை பல்வேறு கட்டங்களில் அறிவித்து வந்துள்ளது. நோய்ப் பரவலைத் தடுக்க மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் ஆகியவை பரிந்துரைத்துள்ள ஒரு சில செயல்பாடுகளுக்கான கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டிலும் சில செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டாலும் சில அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு தளர்வுகளும் அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வருகிறது.

உணவுக் கூடங்களில் அமர்ந்து உண்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், தளர்வுகளில் ஒன்றாக அனைத்து உணவகங்களிலும்  பார்சல் சேவை வழங்க அனுமதிக்கப்பட்டது.உணவக பார்சல் சேவையில் உறைகளின் பயன்பாடு தவிர்க்க முடியாததாக உள்ளது. மளிகை கடைகளும், இறைச்சி மற்றும் மீன் கடைகளும் கட்டுப்பாடுகளுடன் செயல்பட அனுமதித்த நிலையில் அந்த கடைகளிலும் உறைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது.உறைகளை எடுக்கும் போது கடை ஊழியர்கள் எச்சில் தொட்டு அந்த உறைகளை எடுப்பது, பொருட்களை உள்ளே போடுவதற்காக வாயால் ஊதுவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவது கொரோனா தொற்று பரவுவதற்கு வழிவகுக்கும் என்பதால் இதனைத் தவிர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்வது அவசியம் என கருதப்படுகிறது.

சமீபத்தில் இது தொடர்பான ஒரு பொது நல வழக்கினை விசாரித்த மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் கடைகளின் ஊழியர்கள் உணவு பொருட்கள், மளிகை பொருட்கள், பேக்கரி பொருட்கள் ஆகியவற்றை பார்சல் செய்யும் போது உறைகளை கையால் எச்சில் தொட்டு பிரித்தல், வாயால் ஊதுதல் போன்ற செயல்களால் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து உள்ளது என்பது குறித்து கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தவும் அவர்கள் அத்தகைய செயல்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்க்க போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது.கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் வெற்றி பெற பொதுமக்களின் பங்களிப்பும் அவசியம் என்பது மறுக்க முடியாத கூற்றாகும். உணவு பொருட்கள், மளிகை பொருட்கள், பேக்கரி பொருட்கள் ஆகியவற்றை பார்சல் செய்யும் போது உறைகளை கையால் எச்சில் தொட்டு எடுத்தல், வாயால் ஊதி பிரித்தல் போன்ற செயல்களால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதை கடை உரிமையாளர்கள் கவனத்தில் கொண்டு அவர்களுடைய ஊழியர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கவும், அத்தகைய செயல்பாடுகளில் ஊழியர்கள் ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்யும் படியும் இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

         

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>