ஆரணி அடுத்த பூசிமலைக்குப்பத்தில் வனத்துறை கட்டுப்பாட்டுக்குள் கண்ணாடி மாளிகை

*பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிப்பு

ஆரணி  : ஆரணி அருகே பழமை வாய்ந்த கண்ணாடி மாளிகையை சமூக விரோத கும்பல்களிடம் இருந்து மீட்ட வனத்துறையினர் அதனை பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த பூசிமலைக்குப்பம் கிராமத்தில் 1860ம் ஆண்டில் திருமலை சாகிப் தனது காதல் மனைவிக்காக கட்டிய கண்ணாடி மாளிகை உள்ளது. பழமை வாய்ந்த வரலாற்று கட்டிடமாக ஆரணி பகுதியில் இந்த கண்ணாடி மாளிகை இருந்து வருகிறது.

ஆரணி சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான மக்கள், கண்ணாடி மாளிகையை பார்த்து ரசித்து, புகைப்படம் எடுத்து செல்வது வழக்கம். மேலும்,  கடந்த 65 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மாளிகை வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, வனத்துறை இதில் யாருக்கு சொந்தமானது என தெரியாமல் இருந்து வந்தது. இந்நிலையில், இந்த கண்ணாடி மாளிகையில் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால், சில சமூக விரோதிகள் அங்கு மது அருந்துவது, சூதாடுவது உள்ளிட்ட சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

இதைத்தொடர்ந்து, சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட வனத்துறை அலுவலர் அருண்லால் உத்தரவின்பேரில் ஆரணி வனச்சரக அலுவலர் மோகன்குமார் தலைமையில் வனத்துறை அதிகாரிகள் பூசிமலைக்குப்பம் காப்பு காட்டில் ஆய்வு செய்தனர். அப்போது, ஜாகீர்தாரரால் கட்டப்பட்டுள்ள இந்த கண்ணாடி மாளிகை காப்பு காட்டிற்கு அருகே இருப்பதால், பழைய ஆவணங்களை சரி பார்த்தபோது, அந்த இடம் வனத்துறைக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

எனவே, வனத்துறையினர்  இதுகுறித்து கலெக்டரிடம் தெரிவித்து, வருவாய் துறை அதிகாரிகள் மூலம் சர்வே செய்தபோது, கண்ணாடி மாளிகை அமைந்துள்ள 2.50 ஏக்கர் நிலம் வனத்துறைக்கு சொந்தமானது என்பது உறுதியானது. இதையடுத்து, வனத்துறை அதிகாரிகள் பூசிமலைக்குப்பம் கண்ணாடி மாளிகையை மீட்டு, அதனை சுற்றி வேலி அமைத்து பாதுகாக்கப்பட்ட இடம், இது வனத்துறைக்கு சொந்தமானது என அறிவிப்பு பலகை வைத்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

மேலும், கண்ணாடி மாளிகையில் சமூக விரோத கும்பல் யாரையும் அனுமதிக்காமல் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், மாளிகையில் மது குடிப்பது, சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனனர்.

சுற்றுலா தலமாக்கப்படுமா?

ஆரணி அருகே உள்ள பூசிமலைக்குப்பம் கண்ணாடி மாளிகையை சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது ஆரணி பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று கண்ணாடி மாளிகையை சுற்றுலா தலமாக மாற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories:

>