முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கையால் கொரோனா தொற்று இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும்: அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் பேட்டி

ஆவடி: ஆவடியை அடுத்த திருநின்றவூர் பேரூராட்சியில் பிரகாஷ் நகர், நெமிலிச்சேரி ஊராட்சி ஆகிய இடங்களில் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது. பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், முகாமை துவக்கிவைத்து பேசியதாவது: திருவள்ளூர், பூந்தமல்லி சுகாதார மாவட்டத்தில் முதல்கட்டமாக 2 லட்சத்து 95 ஆயிரத்து 146 பேருக்கும் 2ம் கட்டமாக 60ஆயிரத்து 26 பேருக்கும் மொத்தம் 3 லட்சத்து 62 ஆயிரத்து 172 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் போதுமான தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளது. இந்த  தடுப்பூசிகள் மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் சிறப்பு மருத்துவ முகாம்களில், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனையில் போடப்படுகிறது.

கொரோனா நோய் தொற்று தடுப்புக்கு பேராயுதமாக இருப்பது தடுப்பூசிகள். எனவே, பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசிகளை போட்டு, நோய் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கையால் கொரோனா தொற்று இல்லாத மாநிலமாக தமிழ்நாடு விரைவில் மாறும்.இவ்வாறு அமைச்சர் பேசினார்.

முன்னதாக திருநின்றவூர் நடுகுத்தகை ஊராட்சியில் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் 300க்கு மேற்பட்ட முன்கள பணியாளர்களுக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்புகளை அமைச்சர் நாசர்  வழங்கினார். இதில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் டி.தேசிங்கு, பூந்தமல்லி ஒன்றிய குழுத் தலைவர் பூவை.ஜெயக்குமார், மாவட்ட திமுக துணைச் செயலாளர் ஜெ.ரமேஷ்,  பொதுக்குழு உறுப்பினர் ம.ராஜி, பூந்தமல்லி ஒன்றிய குழு துணைத்தலைவர் பரமேஸ்வரி கந்தன், திருநின்றவூர் பேரூர் செயலாளர் தி.வை.ரவி, மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் எஸ்.மூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் யமுனா ரமேஷ், ஊராட்சி தலைவர்கள் நெமிலிச்சேரி தமிழ்ச்செல்வி, நடுகுத்தகை லட்சுமி மற்றும் தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: