மணல், சிமெண்ட் இல்லாமல் தமிழகத்தில் பிரபலமாகி வரும் இண்டர்லாக் பிரிக்ஸ் கட்டுமானம்

சேலம் :  மணல், சிமெண்ட் இல்லாமல் இண்டர்லாக் பிரிக்ஸ் என்று அழைக்கப்படும் செங்கல்லில் கட்டப்படும் கட்டுமான பணிகள் தமிழகத்தில் பிரபலமாகி வருகிறது. இதனால் 40சதவீதம் செலவு குறைந்துள்ளதாக வீடு கட்டுவோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். ‘‘வீட்டை கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார்,’’ என்பது முன்னோர்கள் சொன்ன பழமொழி. இன்றைய காலக்கட்டத்தில் வீடு கட்டுவது என்றால் சாதாரண விஷயமில்லை. கடந்த நூறு ஆண்டுகளுக்கு முன்பு நம் முன்னோர்கள் களிமண்ணை குழைத்து, அதை உருட்டி வீடு கட்டினர். பின்பு சுடாத செங்கல் மூலம் வீடு கட்டினர். கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக சுட்ட செங்கற்களோடு சிமெண்ட், ஆற்று மணல் கலந்து  வீடு கட்டி வருகின்றனர். தற்போது ஆற்று மணல் எடுக்க தடை உள்ளது. இதனால் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக எம் சாண்ட், சிமெண்ட் மூலம் கட்டுமான பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் சமீப காலமாக மணல், சிமெண்ட் இல்லாமல் இண்டர்லாக் பிரிக்ஸ் எனப்படும் சுடாத செங்கல் மூலம் கட்டுமான பணிகளை செய்வது, வீடு கட்டுவோர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கோவை, சேலம், திரப்பூர், தர்மபுரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இதுபோன்ற கட்டுமான பணிகள் அதிகளவில் நடைபெற்று வருகிறது. இது குறித்து சேலம் வலசையூரில் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வரும் இன்ஜினியர் சிங்காரவேலன் புனிதா கூறியதாவது:   கடந்த 10 ஆண்டுகளாக மணல், சிமெண்ட் இல்லாமல் சுடாத செங்கல் மூலமாக கட்டப்படும் கட்டிடங்கள் தமிழக அளவில் பிரபலமாகி வருகிறது. கோவையில் தான் முதன்முதலில் சுடாத செங்கல் மூலமாக கட்டப்படும் கட்டிடங்கள் கட்டப்பட்டன. இவை மரபு வழி கட்டிடமாகும். நம்நாட்டில் 150 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடங்கள் எல்லாம் இதுபோன்ற மரபு வழி கட்டிடம்தான். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாகத் தான் நம் கட்டிடப்பணியின் தன்மை மாறிவிட்டது. சுடாத செங்கல் மூலம் மேற்கொள்ளும் கட்டுமான பணிக்கு சிமெண்ட், மணல் தேவையில்லை.

இந்த வகை செங்கல் 90 சதவீதம் செம்மண்ணில், 10 சதவீதம் சிமெண்ட் சேர்த்து உற்பத்தி செய்யப்படுகிறது. சூளையில் சுடுவதில்லை. வெயிலில் காயவைத்து விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. ஒரு செங்கல் எடை 12 முதல் 13 கிலோ வரை இருக்கும். ₹70 முதல் ₹80 வரை விற்பனை செய்யப்படுகிறது. தற்போதுள்ள கட்டுமான பணியானது  சிமெண்ட், எம். சாண்ட் சேர்த்து சுட்ட செங்கல்லை அடுக்கி மேற்கொள்ளப்படுகிறது. இந்த கட்டுமான பணியில் ஒவ்வொரு வரிசையிலும்  வைக்கப்படும் செங்கல்லின் நடுவில் அரை இஞ்ச் அளவுக்கு இடைவெளி உள்ளது. அந்த இடைவெளியில் தான் செங்கல் மாறி, மாறி லாக்போல் அடுக்கப்படுகிறது. இவ்வாறு அடுக்கும் போது ஒவ்வொரு செங்கல்லும் பின்னிக்கொள்கிறது. அதனால் சுவர் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் விழாது. மேலும் விரிசலும் ஏற்படாது.

செங்கல் வரிசையிலுள்ள இடைவெளிகள் ஒயிட் சிமெண்ட், டெராக்கோட்டா பவுடர் சேர்த்து அடைக்கப்படும். மற்றபடி சுவரை பூசத்தேவையில்லை. தற்போதுள்ள கட்டுமான பணியில் நிலமட்டத்தில் 7 அடி சுவர் எழுப்ப ஒரு மாத காலமாகும். ஆனால் இந்த கட்டுமானத்தில் 5 நாளில் 7 அடி சுவர் எழுப்பிவிடலாம். இதுபோன்ற கட்டுமான பணிக்கு ஆட்கள் அதிகம் தேவைப்படாது. தற்போதுள்ள கட்டுமான பணியை ஒப்பிடுகையில், இண்டர்லாக் செங்கல்லில் கட்டப்படும் கட்டிடத்திற்கு 40 சதவீதம் செலவு குறைகிறது.

இவ்வாறு கட்டப்படும் கட்டிடத்தில் மேலும் இரண்டு அல்லது மூன்று தளம் வரை கட்டிடம் கட்டலாம். அந்தளவுக்கு வலிமையாக இருக்கும். அதேநேரத்தில் கட்டிடத்திற்கும்  உத்தரவாதம் உள்ளது. நான் இன்ஜினியர் என்பதால் எவ்வித தயக்கம் இல்லாமல் எனக்கான வீட்டை கட்டுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>