28ம் தேதி வரை ஊரடங்கு.. 8 மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் பேருந்து சேவை அனுமதிக்க மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை!!

சென்னை : தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் கடந்த மாதம் 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், கொரோனா தொற்று குறைந்து வருவதால் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வருகிற 21ம் தேதியுடன் தற்போது உள்ள ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில்,  மேலும் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

ஊரடங்கு நீட்டிப்பது தளர்வுகள் வழங்குவது குறித்து மருத்துவ வல்லுனர்கள், சுகாதாரத்துறை, அரசுத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின் இதுகுறித்த அறிவிப்பை இன்று மாலை வெளியிடுவார் என்று தெரிகிறது.கட்டுப்பாடுகளுடன் நகைக்கடை, துணிக்கடை மற்றும் பேருந்து சேவையை உள்ளிட்டவற்றுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கொரோனா குறையாத 8 மாவட்டங்களை தவிர்த்து 30 பிற மாவட்டங்களில் பேருந்து சேவை அனுமதிக்கப் பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா குறைவாக உள்ள மாவட்டங்களில் 50 சதவீதம் பயணிகளுடன் பேருந்து சேவையை தொடங்க மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது. கொரோனா பரவல் விகிதம் அதிகம் உள்ள கோவை ஈரோடு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடர மருத்துவ குழு பரிந்துரைத்துள்ளது.அதே நேரம் கொரோனா தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில் பெரிய கடைகள், மால்களை திறக்க மருத்துவ குழு பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>