தோகைமலை ஒன்றிய பகுதியில் வயலில் பறிக்காமல் காய்ந்து வரும் பூசணிக்காய்கள்

தோகைமலை : கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் பூசணிக்காய் சாகுபடி செய்த விவசாயிகள் கொரோனா ஊரடங்கால் விற்பனை இல்லாமல் பல லட்சம் மதிப்பிலான பூசணிக்காய் சேதம் ஏற்பட்டுள்ளது. பூசணிக்காய் என்பது பரங்கிக்காய் கொடிவகை காய்கறிகளில் ஒன்றாகும் என்பதோடு தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில வருடங்களாக தோகைமலை ஒன்றிய பகுதிகளில் கணிசமாக பூசணிக்காய் சாகுபடியை விவசாயிகள் செய்து வருகின்றனர்.

பூசணிக்காயில் கோ 1, கோ 2, அர்க்கா, சூரியமுகி, சந்தன் ஆகிய ரகங்கள் உள்ளது. ஜூன், ஜூலை மற்றும் ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்கள் சாகுபடிக்கு ஏற்ற பருவகாலங்கள் என்று கூறுகின்றனர். ஒரு ஏக்கருக்கு 900 கிராம் விதைகள் தேவைப்படும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். சாகுபடி செய்யும் வயல்களில் விதைகள் விதைக்கபட்ட 7ல் இருந்து 9ம் நாளில் விதை முளைத்துவிடுகிறது. வறண்ட காலங்களில் வாரத்திற்கு 2 முறையும், மற்ற காலங்களில் வாரத்திற்கு 1 முறையும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

 விதைக்கப்பட்ட நாளில் இருந்து 85 முதல் 90 நாட்களில் அறுவடை செய்யலாம் .மகசூல் செய்யப்பட்ட பூசணிக்காய்கள் திருச்சி, ஒட்டன்சத்திரம் போன்ற சந்தைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு என்பதால் பூசணிக்காய் வெளியூர்களுக்கு அனுப்புவதில் மந்தம் ஏற்பட்டது. இதனால் தோகைமலை பகுதிகளில் பூசணிக்காய் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் காய்ந்து வருகிறது. மேலும் அறுவடை செய்யப்பட்ட பூசணிக்காய்கள் சாலை ஓரங்களில் கொட்டப்பட்டு உள்ளது. இதனால் பல லட்சம் மதிப்பிலான பூசணிக்காய்கள் நாசமாகி வருவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

Related Stories: