சுவேந்து அதிகாரி வெற்றியை எதிர்த்து வழக்கு பாஜ கட்சியை சேர்ந்த நீதிபதி விசாரணை நடத்தக் கூடாது: கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மம்தா பரபரப்பு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி போட்டியிட்டார். திரிணாமுலில் இருந்து பாஜ.வுக்கு தாவிய சுவேந்து அதிகாரி, இவரை எதிர்த்து போட்டியிட்டார். இத்தொகுதி வாக்கு எண்ணிக்கையில் முதலில் மம்தா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், சிறிது நேரத்தில் சுவேந்து 1,965 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதனால், மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டுமென்ற மம்தாவின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்தது.   இந்நிலையில், சுவேந்து முறைகேடாக வெற்றி பெற்றதாக, அவரது வெற்றியை எதிர்த்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மம்தா வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நீதிபதி கவுசிக் சந்தா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

மேலும் அவர், இந்த மனு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு இணங்க தாக்கல் செய்யப்பட்டுள்ளதா என நீதிமன்ற பதிவாளர் அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.  இந்நிலையில், நீதிபதி கவுசிக் சந்தாவை மாற்றி வேறு நீதிபதி அமர்வில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென, கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மம்தா கடிதம் எழுதி உள்ளார். அதில், ‘நீதிபதி கவுசிக் சந்தா பாஜ கட்சியின் உறுப்பினராக உள்ளார்’ என குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, நீதிபதி சந்தாவை மாற்ற வேண்டும் அல்லது அவராகவே வழக்கு விசாரணையில் இருந்து விலக வேண்டுமென நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

முகுல் ராயை தகுதி நீக்கம் செய்ய கடிதம்  

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் கிருஷ்ணா நகர் தொகுதியில், பாஜ சார்பில் போட்டியிட்டு வென்ற முகுல் ராய், சமீபத்தில் மீண்டும்  திரிணாமுல் கட்சியில் இணைந்தார். இதனால், கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் முகுல் ராயை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் சபாநாயகரிடம் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரான பாஜ.வின் சுவேந்து அதிகாரி நேற்று கடிதம் வழங்கினார்.

Related Stories: