இந்திய சட்டமே உயர்வானது உங்கள் கம்பெனி சட்டமல்ல: டிவிட்டர் நிர்வாகிகளிடம் நாடாளுமன்ற குழு ஆவேசம்

புதுடெல்லி: ‘உங்கள் நிறுவனத்தின் சட்டத்தை விட, இந்திய நாட்டின் சட்டங்களே உயர்வானது,’ என்று டிவிட்டர் நிர்வாகிகளை நாடாளுமன்ற நிலைக்குழு கடுமையாக எச்சரித்துள்ளது. டிவிட்டருக்கும் மத்திய அரசுக்கும் கடந்த சில மாதங்களாகவே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. குடியரசு தினத்தன்று டெல்லியில் நடந்த டிராக்டர் பேரணியின்போது இந்த சச்சரவு விஸ்வரூபம் எடுத்தது. தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு எதிராக பரப்பப்பட்ட டூல் கிட் விவகாரத்தால் மீண்டும் மோதல் ஏற்பட்டது. மேலும், சமீபத்தில் மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி குறை தீர்ப்பு அதிகாரிகளை நியமிக்க மறுத்த விவகாரத்தால் இந்த மோதல் பெரிதானது.  இந்நிலையில், சமூக வலைதளங்களின் பயன்பாடு தொடர்பாக நாடாளுமன்றக் நிலைக்குழு கடந்த வாரம் ஆலோசனை நடத்தியது.

இந்த கூட்டத்தின் முடிவில், மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாகவும், சமூக வலைதளங்களை தவறாகப் பயன்படுத்துவதை தடுப்பது தொடர்பாகவும் விளக்கம் அளிக்கும்படி டிவிட்டரின் இந்திய இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன்படி, நாடாளுமன்ற நிலைக்குழுவின் முன்பாக டிவிட்டரின் சார்பில் பொது கொள்கை மேலாளரான ஷாகுப்தா கம்ரான், சட்ட ஆலோசகர் ஆயுஷி கபூர் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அவர்களிடம் காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் தலைமையிலான நிலைக்குழு விசாரித்தது. அப்போது, ‘இந்தியாவில் இந்த நாட்டின் சட்டமே எல்லாவற்றுக்கும் உயர்வானது. உங்கள் நிறுவனத்தின் சட்டம் அல்ல. இந்திய அரசின் சட்டங்களை மதிக்க தவறும் உங்கள் நிறுவனத்துக்கு ஏன் அபராதம் விதிக்கக் கூடாது?’ என்று காட்டமாக கேட்டுள்ளது.

Related Stories: