கோபா அமெரிக்கா கால்பந்து: பெருவை பந்தாடியது பிரேசில்

ரியோ டி ஜெனிரோ: கோபா அமெரிக்கா கால்பந்து போட்டித் தொடரின் பி பிரிவு லீக் ஆட்டத்தில், பிரேசில் அணி 4-0 என்ற கோல் கணக்கில் பெரு அணியை எளிதாக வீழ்த்தியது. நில்டன் சான்டோஸ் ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில் முழுவதுமாக ஆதிக்கம் செலுத்திய பிரேசில் அணிக்கு லோபோ சில்வா 12வது நிமிடத்தில் முதல் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். இடைவேளை வரை இதே நிலை நீடித்தது. இரண்டாவது பாதி ஆட்டத்தில் நட்சத்திர வீரர் நெய்மர் (68வது நிமிடம்), பாரோஸ் ரிபெய்ரோ (89’), ரிச்சர்லிசன் (90’+3) ஆகியோர் கோல் அடிக்க, பிரேசில் அணி 4-0 என்ற கணக்கில் பெரு அணியை பந்தாடியது.

பி பிரிவில் பிரேசில் அணி தொடர்ச்சியாக 2வது வெற்றியுடன் 6 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. கொலம்பியா 2வது இடத்திலும் (1 வெற்றி, 1 டிரா), வெனிசுவேலா (1) 3வது இடத்திலும் உள்ளன. ஈக்வடார் (0), பெரு (0) அணிகள் பின்தங்கியுள்ளன.

பிரேசில் அணிக்காக தனது 68வது கோலை பதிவு செய்த நெய்மர், ரொனால்டோவை (67 கோல்) பின்னுக்குத் தள்ளினார். மகத்தான சாதனை வீரர் பீலே 77 கோல் அடித்து முதலிடத்தில் உள்ளார். அவரது சாதனையை சமன் செய்ய நெய்மருக்கு இன்னும் 9 கோல் தேவை.

Related Stories:

>