நிதி முறைகேடு புகாரில் சிக்கிய பிஎம்சி வங்கியை வாங்குகிறது சென்ட்ரம்: நிதி வங்கி தொடங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல்

மும்பை:  மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் பஞ்சாப் - மகாராஷ்டிர கூட்டுறவு வங்கி, எச்டிஐஎல் என்ற வீட்டு வசதி மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனத்துக்கு சுமார் 4,355 கோடி கடன் வழங்கியது. ஆனால், அந்த நிறுவனம் கடனை திருப்பிச் செலுத்தவில்லை. முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்த வங்கி அதிகாரிகள், இந்த விவகாரத்தை ரிசர்வ் வங்கிக்கு தெரிவிக்காமல் மறைத்து விட்டனர். வங்கிக்கு எச்டிஐஎல் தர வேண்டிய நிலுவை கடந்த 2019 செப்டம்பர் 19ம் தேதிப்படி 6,500 கோடி. இது வங்கி அப்போது வழங்கியிருந்த கடன் தொகையில் சுமார் 73 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்பிறகு ரிசர்வ் வங்கி தணிக்கையில் இந்த மாபெரும் மோசடி அம்பலம் ஆனது.

இதுகுறித்து மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த முறைகேட்டில் தொடர்புடையதாக, பிஎம்சி வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஜாய் தாமஸ், எச்டிஐஎல் நிறுவன இயக்குநா் ராகேஷ் வதவான், அவரது மகன் சாரங், வங்கியின் முன்னாள் தலைவர் வாரியம் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேற்கண்ட முறைகேடு குறித்து, சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை  விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் குருவாஷிஷ் கட்டுமான நிறுவனத்தின் இயக்குநர் பிரவீன் ராவுத் கைது செய்யப்பட்டார். அவரது மனைவி மாதுரி ராவுத்திடமும் விசாரணை நடந்தது. இந்த வங்கியில் இருந்து சஞ்சய் ராவுத்தின் மனைவி வர்ஷா ராவுத்துக்கு பண பரிவர்த்தனை சென்றது தெரிய வந்ததால், அவரிடமும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தினர்.

நிதி முறைகேடுகளை தொடர்ந்து, இந்த வங்கியில் பணம் எடுக்க ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளை விதித்தது. பின்னர் சிறிது தளர்த்தப்பட்டது.கடந்த 2020 மார்ச் 31ம் தேதிப்படி, பிஎம்சி வங்கியின் மொத்த டெபாசிட் 10,727.12 கோடியாகவும், மொத்த கடன் வழங்கல்  4,472.78 கோடியாகவும் உள்ளது. இந்த வங்கியை வாங்குவதற்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என, பிஎம்சி வங்கி கடந்த ஆண்டு நவம்பர் 3ம் தேதி அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்கு விருப்பம் தெரிவித்து சென்ட்ரம் நிதிச்சேவைகள் நிறுவனம் கடந்த பிப்ரவரி 1ம் தேதி விண்ணப்பித்திருந்தது. இந்த சூழ்நிலையில், சென்ரம் நிதிச்சேவைகள் நிறுவனம், சிறு நிதி வங்கி தொடங்க, ரிசர்வ் வங்கி கொள்கை அடிப்படையில் ஒப்புதல் வழங்கியுள்ளது. எனவே, இந்த நிறுவனம், பிஎம்சி வங்கியை வாங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.

Related Stories: