×

மேகதாது அணை கட்டும் முடிவை கர்நாடக அரசு உடனடியாக கைவிட வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

சென்னை: மேகதாது அணை கட்டும் முடிவை கர்நாடக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் “ஒன்றிய அரசு அனுமதி வழங்கியதும் மேகதாது அணை கட்டப்படும்” என கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா ஒருதலைப்பட்சமாக அறிவித்திருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.

இத்திட்டம் விவசாயிகளின் நலனுக்கு எதிரானது, தமிழ்நாடு சட்டமன்றத்தில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மாணம் நிறைவேற்றப்பட்டு கடந்த 2015ல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து அத்தீர்மானத்தை பிரதமர் மோடியிடம் வழங்கினர். சமீபத்தில் பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போதும் மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று வலியுறுத்தியிருந்தேன். ஆனால், எடியூரப்பா தன்னிச்சையாக இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டிருப்பது இரு மாநில நல்லுறவிற்கு எவ்விதத்திலும் உகந்த ஒரு நிலைப்பாடு அல்ல என்பதோடு, தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு விவசாயிகளையும் வஞ்சிக்க முயற்சிக்கும் செயலாகும்.

எனவே கர்நாடக அரசு இம்முடிவை கைவிட வேண்டும், ஒன்றிய அரசு அணை கட்ட அனுமதிக்க கூடாது என்றும் தமிழ்நாட்டின் சார்பில் எனது கடுமையான எதிர்ப்பினை தெரிவித்துக்கொள்கிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.

Tags : Government of Karnataka ,Megha Dadu Dam ,Chief Minister ,MK Stalin , Government of Karnataka should immediately abandon the decision to build the Megha Dadu Dam: Chief Minister M.K. Stalin's insistence!
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...