தற்செயலாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி... கொரோனாவால் இந்தியாவில் பேரழிவு: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் கவலை

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் பேரழிவு ஏற்பட்டுள்ளதாக, அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் கவலை தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் இந்தியாவில் வேகமெடுத்த கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலையில், நோய் பாதிப்பு மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்தது. கடந்த சில வாரங்களாக நோய்த்தொற்று மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில், சீனாவில் உள்ள ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவியதாக தொடர்ந்து கூறிவரும் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப், தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமான சீனா, அமெரிக்காவிற்கு 10 டிரில்லியன் டாலர் இழப்பீடு தொகை கொடுக்க வேண்டும். கொரோனா வைரஸ் நோய்க்கு அடிப்படையான சார்ஸ்-கோவ் -2  என்ற வைரஸ் வூஹானில் உள்ள ஆய்வகத்தில் இருந்துதான் கசிந்தது.

இப்போது இந்தியாவில் என்ன நடக்கிறது என்று பாருங்கள். சீனா விஷயத்தில் இந்தியா எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்பதை பார்க்க வேண்டும். தொற்று பரவலால் இந்தியா தற்போது பேரழிவை சந்தித்துள்ளது. இதேபோல் தான் ஒவ்வொரு நாடும் கொரோனா ஏற்படுத்திய பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், கொரோனாவை பரப்ப காரணமான சீனா, உலக நாடுகளுக்கு இழப்பீடு தொகையை அளிக்க வேண்டும். நான் கூறும் இழப்பீடு தொகையை காட்டிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பலமடங்கு அதிகமாக உள்ளது. ஒவ்வொரு நாடும், தங்களது செய்த கட்டமைப்புகளை இழந்து வருகின்றன.

தற்செயலாக கொரோனா பரவல் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி... என்னை பொறுத்தவரை அது ஒரு விபத்து என்றே கூறுவேன். ஒவ்வொரு நாடும் மிக மோசமான பொது சுகாதார நெருக்கடியை அனுபவித்து வருகிறது’ என்றார். ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கூற்றுப்படி, உலகளவில் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு எண்ணிக்கை 1,771,36,569 ஆகவும், பலி எண்ணிக்கை 38,35,123 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: