சேலம் மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி இல்லாததால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்

சேலம்: சேலம் மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி இல்லாததால், மையங்களுக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். சேலம் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றை தடுக்க கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதற்காக சேலம் மாநகராட்சி பகுதியில் 30 மையமும், மாவட்ட பகுதியில் 92 மையமும் என மொத்தம் 122 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, தடுப்பூசியை சுகாதாரத்துறையினர் செலுத்தி வருகின்றனர். நேற்றைய தினம் 30 ஆயிரம் தடுப்பூசி போடப்பட்டது. இந்நிலையில் இன்று காலை, கொரோனா தடுப்பூசி போட மையங்களுக்கு பொதுமக்கள் வந்தனர்.

ஆனால், தடுப்பூசி இல்லாததால் பல்வேறு மையங்களில், பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவில்லை. மையங்களின் வாசலில் தடுப்பூசி இருப்பு இல்லை என அறிவிப்பு பலகை வைத்தனர். சில மையங்களில் மட்டும் ஏற்கனவே வழங்கப்பட்ட தடுப்பூசி மிக குறைந்த அளவில் இருந்ததால், அதனை பொதுமக்களுக்கு செலுத்தினர். இதுபற்றி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில்,‘‘சென்னையில் இருந்து நேற்று மாலை கூடுதல் தடுப்பூசி வரும் என எதிர்பார்த்தோம். ஆனால் வந்து சேரவில்லை. அதனால், இன்றைய தினம் தடுப்பூசி போட முடியவில்லை. இன்று மாலைக்குள் கூடுதல் தடுப்பூசி டோஸ் வந்து சேரும். அதனால், நாளைக்கு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்,’’ என்றனர்.

Related Stories: