கோவை அருகே கனமழை: குளத்தின் கரை உடைந்து 20 ஏக்கர் பயிர்கள் நாசம்

தொண்டாமுத்தூர்: கோவை அருகே கனமழை காரணமாக குளத்தின் கரை உடைந்து, 20 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு, சின்னவெங்காயம் வெள்ளத்தில் மூழ்கின. கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் தொடர் மழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்திலும் கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மழை நீடித்து வருவதால் மலையில் புதிய அருவிகள் உருவாகியுள்ளன. இதனால் சின்னாறு, நீர்வாய்க்கால் போன்றவற்றிலும் துணை ஓடைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் பூண்டி மலையடிவாரத்தில் 100 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள உக்குளத்திற்கு நீர்வரத்து அதிகரித்து குளக்கரையில் அரிப்பு ஏற்பட்டதோடு, ஒரு பக்கமாக கரை உடைந்து தண்ணீர் வெளியேறியது.

இதன் காரணமாக குளத்தின் அருகே 20 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு, சின்ன வெங்காய பயிர்கள் மூழ்கின. அப்பகுதி விவசாயிகள் உடனடியாக ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்து மதகுகளை திறந்து மழை நீரை நொய்யல் ஆற்றில் திறந்து விட்டனர். குளத்தின் நீர்மட்டம் குறைந்ததை தொடர்ந்து உடைந்த கரைகளை செப்பனிட்டனர். அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘‘உக்குளம் 100 ஏக்கர் பரப்பளவு கொண்டது. தற்போது 80 சதவீதம் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. மீதமுள்ள 20 சதவீதம் ஆக்கிரமிப்பில் உள்ளது. பொதுப்பணித்துறையினர் விரைந்து வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கரையை சீரமைத்து பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: