சாலை மறியலின் போது ஏற்பட்ட பதற்றத்தில் கல் வீச்சை எதிர்கொள்ள ‘சேர்’ பயன்படுத்தியது தப்பா?.. இன்ஸ்பெக்டர் உட்பட 3 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட்

உன்னாவ்: உன்னாவில் நடந்த சாலை மறியலின் போது கல் வீச்சை எதிர்கொள்ள பிளாஸ்டிக் சேர் தற்காப்புக்காக பயன்படுத்திய விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் உட்பட 3 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் அடுத்த தேவிகொடா கிராமத்தில் சாலை விபத்தில் இருவர் பலியாகினர். அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பட்டன. சடலத்தை தகனம் செய்ய கொண்டு சென்ற போது, திடீரென சிலர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அதனால் ஏற்பட்ட பதற்றத்தின் போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சிலர் தங்களது பாதுகாப்பு கவசமாக பிளாஸ்டிக் இருக்கையை தலையில் கவிழ்த்துக் கொண்டு லத்தியுடன் சென்றனர்.

இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானது. இந்த நிலையில், பாதுகாப்பு பணியில் அலட்சியம் காட்டியதாக 3 போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக லக்னோ போலீஸ் ஐ.ஜி லட்சுமி சிங் வெளியிட்ட உத்தரவில், ‘இன்ஸ்பெக்டர் தினேஷ் சந்திர மிஸ்ரா மற்றும் மூன்று போலீஸ்காரர்கள் தங்களது பணியில் அலட்சியம் காட்டியதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்’ என்று தெரிவித்துள்ளார். அதேநேரம், உத்தரபிரதேச காவல்துறை வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘எவ்விதமான சட்டம் ஒழுங்கு சூழ்நிலையையும் சமாளிக்க, அனைத்து மாவட்டங்களுக்கும் தேவையான உபகரணங்களும், வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளன.

உன்னாவில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக உளவுத்துறை தகவல் கொடுத்தும், அப்பகுதி காவல்துறை அலட்சியமாக செயல்பட்டுள்ளது. அதனால், டிஜிபியிடம் உரிய விளக்கம் கோரட்டப்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் உட்பட 3 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உன்னாவ் எஸ்பி ஆனந்த் குல்கர்னி கூறுகையில், ‘தேவி கெடா கிராமத்தில் ஏற்பட்ட சட்ட ஒழுங்கு பிரச்னையில், சடலங்களை தகனத்திற்கு எடுத்துச் செல்லும் போது சிலர் சாலை மறியல் செய்தனர். அவர்களை அப்புறப்படுத்த முயன்ற போது, சிலர் போலீசார் மீது கற்களை வீசி தாக்கினர்.

கூட்டத்தை கலைக்க தேவையான படைகள் அனுப்பப்பட்டது. இருந்தும், இவ்விவகாரம் தொடர்பாக 40க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Related Stories: