குழந்தை பருவத்தில் மருத்துவர்களே கைவிட்ட நிலையில் தடைகளை தகர்த்து சாதிக்கும் ‘உடல் ஒட்டிய இரட்டை இளைஞர்கள்’- இருவரும் தனித்தனியாக வாக்குரிமை கோரி விண்ணப்பம்

அமிர்தசரஸ்: பஞ்சாப்பில் ஒட்டிய உடலுடன் கூடிய இரட்டை இளைஞர்கள் பட்டதாரி படிப்பை முடித்துவிட்டு, தற்போது தனித்தனியாக வாக்குரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். தலைநகர் டெல்லியில் உள்ள சுசேதா கிரிப்லானி மருத்துவமனையில் கடந்த ஜூன் 14, 2003 அன்று காமினி என்ற பெண்ணுக்கு உடலின் மார்பு பகுதிக்கு கீழ் சாதாரண மனிதர்களுக்கு உள்ளது போன்ற உடல்வாகும், மார்பு பகுதிக்கு மேல் இரு உருவங்களாக உடல்வாகும் கொண்ட ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு தனித்தனி தலை, மார்பு, இதயம், நுரையீரல், முதுகெலும்பு ஆகியன உள்ளன. ஆனால், உடலின் மற்ற பகுதிகளான சிறுநீரகம், கல்லீரல், சிறுநீர்ப்பை உள்ளிட்ட மற்ற உடல் பாகங்கள் அனைத்தும் ஒரு நபருக்கு உள்ளது போன்று அமைந்திருந்தது.

மிகவும் சிரமத்துடன் பராமரிக்க வேண்டும் என்பதால், இந்த குழந்ைதகள் நீண்ட நாட்கள் பிழைக்கமாட்டார்கள் என்று அவர்களது உறவினர்கள் மற்றுமின்றி மருத்துவர்களே கூறினர். இதனால், குழந்தைகளின் பெற்றோர்களான சுர்ஜித் குமார் - காமினி தம்பதியர், குழந்தையை வளர்ப்பதில் ஒருவித குழப்பத்துடன் இருந்தனர். அவர்கள் தங்களது சொந்த ஊரான பஞ்சாப்பிற்கு மருத்துவமனையில் இருந்து குழந்தையை எடுத்துச் செல்ல மறுத்துவிட்டனர். அப்போது, பிங்கல்வாராவைச் சேர்ந்த பிபி இந்தர்ஜித் கவுர் என்பவர், அந்த குழந்தையை தானே வளர்ப்பதாக கூறி, அந்த குழந்தைகளை பராமரிப்பதற்காக நர்ஸ் ஒருவரையும் நியமித்து கவனித்து வந்தார். இந்த இரட்டை சகோரர்களுக்கு சோஹ்னா - மோகனா என்று அவரே பெயரிட்டார்.

இருவரது உடல் ஒன்றாகவும், மனங்கள் இரண்டாகவும் இருப்பதால், ஒருவர் விரும்பும் செயல் மற்றொருவருக்கு ஏற்புடையதாக இல்லாமல் போகலாம். இதனால், ஒருவர் மனதை ஒருவர் புரிந்து செயல்பட வேண்டியுள்ளது. அதே மனநிலையில் தான் இரு குழந்தைகளையும் இந்தர்ஜித் கவுர் வளர்த்தார்.  சோஹ்னா ஒரு இடத்திற்கு செல்லலாம் என்று நினைத்தால், மோகனாவிற்கு உடலும், மனமும் கீழ்ப்படிகிறது. அதேபோல், மோகனா விருப்பத்திற்கு சோஹ்னாவின் மனமும், உடலும் கீழ்படிகிறது. அதனால், சோஹ்னா எங்காவது செல்ல விரும்பினால், முன்கூட்டியே மோகனாவுக்குத் தெரிவித்து விடுகிறார். இவர்களது கால்கள் ஒருவரது பேச்சுக்கும் ஆணைக்கும் கட்டுப்படும்  என்பதால், ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஒருவர் அழும் போது, மற்றொருவர் அவரை சமாதானப்படுத்துகிறார். இப்படியாக வளர்ந்து வந்த அவர்களுக்கு ஐந்து வயது பூர்த்தியடைந்தவுடன், அவர்கள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் சேர்க்கப்பட்டனர். இருவருக்கும் தனித்தனி நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. மாணவர் வருகைப் பதிவேடும் இருவர் பெயரிலும் இருந்தது. இருவரும் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு என்று படிப்படியாக படித்து, எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை படித்து முடித்தனர். படிக்கும் காலத்தில் கல்லூரியில் இருவரது ரோல் எண்களும் வெவ்வேறானவை; ஆதார் அட்டைகளும் வேறுபட்டவை. அரசின் அனைத்து ஆவணங்களிலும், வெவ்வேறு பெயர்களில் இருவர் என்றே பதிவாகி உள்ளது.

மூன்றாண்டு டிப்ளமோ படிப்பை முடித்த  இரட்டை சகோதரர்கள், மனவாலாவில் உள்ள எலக்ட்ரீஷியன் லக்பீர் சிங்கிடம், படிப்பு சார்ந்த அடிப்படை செயல்முறை அறிவை வளர்த்துக் கொள்கின்றனர். அதாவது, எலக்ட்ரீஷியன் வேலையைக் கற்றுக் கொள்கின்றனர். மின் சாதனத்தை சரிசெய்யும் போது, சோஹ்னா ஸ்க்ரூடிரைவரை பிடித்திருக்க, மோகனா அதனை திருகுகிறார். எந்த வேலையும் மிகவும் எளிதாக, விரைந்து முடிக்கும் அளவிற்கு தங்களை மேம்படுத்திக் கொண்டுள்ளனர். சாதாரண இளைஞர்கள் இயங்குவது போன்றே அவர்களின் நடை பாவனைகள் உள்ளன. மற்றவர்களை போல் இருந்தாலும், அவர்களின் எண்ணங்கள் இரண்டும் வெவ்வேறானவை.

இருந்தும்,  மருத்துவர்களே  இந்த குழந்தைகள் பிழைக்கமாட்டார்கள் என்று கைவிரித்த நிலையில், இன்று இவர்கள் சாதனையாளர்களாக உருவெடுத்து வருகின்றனர். இருவரும் மாற்றுத்திறனாளிகள் என்ற அடிப்படையில், அம்மாநில அரசும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் நம்பிக்கையை அவர்களை வளர்த்த இந்தர்ஜித் கவுர் கூறுகிறார். இந்நிலையில், கடந்த 14ம் தேதியுடன் இருவருக்கும் 18 வயது பூர்த்தியடைந்ததால், அவர்கள் தங்களுக்கான வாக்குரிமையை பெறுவதற்காக தனித்தனியாக விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். இதுகுறித்து அமிர்தசரஸ் தேர்தல் அதிகாரிஹிமான்ஷு அகர்வால், ‘இருவரின் ஆதார் அட்டை வெவ்வேறாக இருப்பது போலவே, இருவருக்கும் தனித்தனி வாக்காளர் அடையாள அட்டையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இருவரும் ஒரு உடல் உடையவர்களாக இருந்தாலும், தனித்தனியாக வாக்களிக்கும் உரிமை அவர்களுக்கு கிடைக்கும்’ என்றார். சாதாரண மனிதர்களே கடும் போராட்டத்தில் வாழ வேண்டிய இந்த காலத்தில், மிகுந்த ‘இரட்டை’ தன்னம்பிக்கையுடன் சாதித்து காட்டும் இந்த பஞ்சாப் இரட்டையர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Related Stories: