2015ல் மம்தா உறவினரை அறைந்த பாஜக நிர்வாகி அடித்துக் கொலை

கொல்கத்தா: மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலின் போது திரிணாமுல் காங்கிரசில் இருந்து ​​பாஜகவில் இணைந்த தேபாஷிஷ் ஆச்சார்யா, உள்ளூர் நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார். இவர் கொல்கத்தாவில் நேற்றிரவு மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார். தகவலறிந்த போலீசார், தேபாஷிஷ் ஆச்சாரியாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தது. இச்சம்பவத்தால் கொல்கத்தா நகரில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.  கொலையான தேபாஷிஷ் ஆச்சார்யா, கடந்த 2015ம் ஆண்டில் நடந்த பொதுக் கூட்டத்தில் மம்தா பானர்ஜியின் உறவினரான அபிஷேக் பானர்ஜியை கன்னத்தில் பளார் என்று அறைந்தார்.

அப்போது ​​தேபாஷிஷ் ஆச்சார்யாவை மேடையில் இருந்தவர்கள் பலமாக தாக்கினர். அதன்பின், அபிஷேக் பானர்ஜி தரப்பில் மன்னிப்பு கோரப்பட்டது. இந்நிலையில், தேபாஷிஷ் ஆச்சார்யா கொலை செய்யப்பட்டது குறித்து பாஜகவின் மேற்குவங்க பொறுப்பாளர் கைலாஷ் விஜயவர்ஜியா கூறுகையில், ‘சட்டஒழுங்கு சீர்கெட்டு விட்டதால், மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும். மேற்குவங்க தேர்தலுக்கு பின்னர் இதுவரை 48 பாஜக தொண்டர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். மறுபுறம், பங்களாதேஷில் இருந்து ஊடுருவியவர்களால், மாநிலத்தில் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன’என்றார்.

Related Stories: