நந்திகிராம் தொகுதி பாஜக எம்எல்ஏ சுவேந்து வெற்றி செல்லாது: ஐகோர்ட்டில் மம்தா மனு தாக்கல்

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் நடந்த சட்டப் பேரவை தேர்தலில் முதலமைச்சரும், திரினாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி, புர்பா மெட்னிபுர் மாவட்டத்தில் உள்ள நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்ட சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றார். இவர், ஏற்கனவே திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டு மம்தாவை எதிர்த்து போட்டியிட்டார். தேர்தல் முடிவுகள் வெளியான கடந்த மே மாதம் 2ம் தேதி, முதலில், நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதை அடுத்து, சில மணி நேரத்திற்கு பிறகு, பா.ஜ.க.,வின் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றிருந்தார். இந்நிலையில், நந்திகிராம் சட்டப்பேரவைத் தொகுதியில், பாஜகவின் சுவேந்து அதிகாரியின் வெற்றியை எதிர்த்து, முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Related Stories: