21ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டம் எதிரொலி: கவர்னர் பன்வாரிலாலுடன் சபாநாயகர் அப்பாவு சந்திப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டம் வருகிற 21ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதையொட்டி தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சபாநாயகர் அப்பாவு இன்று காலை சந்தித்து பேசினார். அப்போது, பேரவை கூட்டத்தில் ஆளுநர் உரை நிகழ்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த மே மாதம் 7ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த மே மாதம் 11 மற்றும் 12ம் தேதி நடைபெற்றது. 11ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் எம்எல்ஏக்கள் பதவியேற்றுக் கொண்டனர். 12ம் தேதி சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது.

அப்போது, சபாநாயகராக அப்பாவு, துணை சபாநாயகராக கு.பிச்சாண்டி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு, முதன் முதலாக தமிழக சட்டப்பேரவை கூட்டம் வருகிற 21ம் தேதி (திங்கள்) காலை 10 மணிக்கு நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு சில தினங்களுக்கு முன் அறிவித்தார். 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் என்பதால், அன்றைய தினம் பேரவை கூட்டம் தொடங்கியதும் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார். தமிழக சட்டப்பேரவை கூட்டம், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது.

அங்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்க, சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க உள்ள அனைத்து உறுப்பினர்கள், சட்டப்பேரவை ஊழியர்கள், பத்திரிகையாளர்களுக்கு இன்றும், நாளையும் கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது. கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே பேரவை கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்று சபாநாயகர் அப்பாவு நேற்று அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் சபாநாயகர் அப்பாவு இன்று காலை சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினார்.

சபாநாயகராக பதவியேற்ற பின் முதல்முறையாக அப்பாவு, தமிழக கவர்னரை இன்று சந்தித்தார். அவருக்கு கவர்னர் வாழ்த்து தெரிவித்துக் கொண்டார். இதைத்தொடர்ந்து, 21ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுவது குறித்தும், அன்றைய தினம் தாங்கள் (கவர்னர்) உரையாற்ற வேண்டும் என்றும் சபாநாயகர் அழைப்பு விடுத்தார். சபாநாயகரின் அழைப்பை தமிழக கவர்னர் ஏற்றுக் கொண்டார். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடம் நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி மற்றும் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Related Stories: