ரூ.234 கோடியில் மேற்கொள்ளப்பட்ட சாலை பணிகளை விரைவில் முடிக்க அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தல்

சென்னை: பொதுப்பணித் துறை அமைச்சர்  எ.வ.வேலு  சென்னை அருகே நெடுஞ்சாலை துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகளை இன்று ஆய்வு செய்தார்.  சென்னை ராஜூவ் காந்தி சாலையில் ரூ.108.13 கோடி மதிப்பில் இந்திரா நகர் சாலை சந்திப்பு, டைடல் பார்க் சந்திப்புகளில் நடைபெற்று வரும் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு பணிகளான யூ வடிவ மேம்பாலங்கள், இசிஆர் சாலைப்பிரிவில் நடைமேம்பாலம், பக்கிங்காம் கால்வாய் மீது கூடுதல் பாலம் ஆகியவற்றினை ஆய்வு செய்து பணிகளை விரைவு படுத்திட அறிவுரை வழங்கினார்.

சென்னை எல்லைக்குள் ராஜூவ் காந்தி சாலையில் உள்ள பெருங்குடி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூரில் மேடவாக்கம் சாலை, கலைஞர் கருணாநிதி சாலை சுங்கச்சாவடிகளை ஆய்வு செய்து அவற்றில் பொதுமக்கள் சந்திக்கும் குறைகளை களைய தேவையான நடவடிக்கை எடுக்க தகவல் தொழில்நுட்ப விரைவுச் சாலை நிறுவனத்திற்கு உத்திரவிட்டார். தேசிய நெடுஞ்சாலையில் பெருங்களத்தூர் பகுதியில் ரூ.234.37 கோடியில் முடிக்கப்பட்ட சாலை பணிகளை ஆய்வு செய்து தடைப்பட்டுள்ள சிறு சிறு பணிகளை விரைவில் முடிக்கவும்,

இந்த சாலையில் கட்டமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடிகளையும் அதில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளையும் ஆய்வு செய்து பொது மக்கள் எவ்வித சிரமத்திற்கும் ஆளாகாமல் சுங்க சாவடிகளை கடக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தினார்.  இந்த ஆய்வின் போது தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: