மத்திய அரசின் திறமையின்மையால் வறுமை அதிகரிப்பு: பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி சரமாரி குற்றச்சாட்டு

டெல்லி: பிரதமர் மோடி ஆட்சி நிா்வாகத்தில் செய்த தவறுகளை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு எம்பியுமான ராகுல்காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘கொரோனா பாதிப்புக்கு பின்னர், உலகில் அதிகரித்துள்ள வறுமையில் இந்தியாவின் பங்களிப்பு மட்டும் 57.3 சதவீதமாக உள்ளது என்று உலக வங்கியின் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. நாட்டில் வறுமை அதிகரித்துள்ளதற்கு முக்கியமான காரணம், கொரோனா பிரச்னையை, மத்திய  அரசு தவறாகக் கையாண்டதுதான்.

இருந்தாலும், தற்போது அடுத்த என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிக்க வேண்டிய இடத்தில் உள்ளோம். நாட்டை மறுசீரமைக்க கட்டாயம் உள்ளது. தோல்விகளை ஏற்க மறுப்பது பிரச்னைக்கு தீர்வாக அமையாது. கொரோனா காலப் பிரச்னைகளை, தனது அரசு சரியாக நிர்வகிக்கவில்லை என்ற தவறை பிரதமர் மோடி ஒப்புக் கொள்ள வேண்டும். மேலும், பொருளாதாரம் உள்ளிட்ட விஷயங்களில் அவர் துறை சார்ந்த வல்லுநர்களிடம் உரிய ஆலோசனைகளைப் பெற வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார். மேலும், இதுதொடர்பாக ஓர் அறிக்கையும் டுவிட்டரில் பகிா்ந்துள்ளார்.

அதில் ‘கொரோனா பிரச்னைக்குப் பிறகு சர்வதேச அளவில் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. மேலும், நடுத்தர வகுப்பினராக இருந்த பலரும் வறுமைக் கோட்டுக்கு கீழ் சென்றுவிட்டனர். சர்வதேச அளவில் வறுமையில் வாடும் ஏழைகளின் அதிகரிப்பில் இந்தியாவின் பங்களிப்பு 57.3 சதவீதம். நடுத்தர பிரிவில் இருந்து வறுமைக் கோட்டுக்கு கீழ் சென்றவர்களில் அதிகரிப்பில் இந்தியாவின் பங்களிப்பு 59.3 சதவீதம்’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: