85 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தனியாருக்கு தாரை வார்ப்பு: கே.எஸ்.அழகிரி கண்டனம்

சென்னை: தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் 85 ஆண்டுகளாக இயங்கி வரும்  இந்தியன் ஓவர்சீஸ் வங்கியைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் முடிவை மத்திய  அரசு திரும்பப் பெற வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் சிந்து பேங்க், யூகோ பேங்க், பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியை தனியாருக்கு விற்பனை செய்வது என்ற பரிந்துரையை மத்திய அரசுக்கு நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி போன்ற லாபத்தில் இயங்கும் வங்கிகளை தனியாருக்குத் தாரை வார்த்துக் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்விக்கு மோடி அரசிடம் இதுவரை பதில் இல்லை. எனினும் ஆண்டுக்கு 2 பொதுத் துறை வங்கிகளைத் தனியார் மயமாக்குவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், 2021-22 ஆண்டில் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை விற்பனை செய்யும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இதுதவிர, மாநில கட்டுப்பாட்டில் இயங்கும் வங்கிகளையும் தனியார் மயமாக்குவது தொடர்பாகச் சட்டத் திருத்தம் செய்ய மத்திய அரசு ஆலோசித்து வருவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை ஒரு வங்கியைக் கூட உருவாக்காத மோடி அரசு, மக்களுக்கு சேவை செய்து கொண்டும், அதேசமயம் லாபத்திலும் இயங்கும் இந்தியன் ஓவர்சீஸ் போன்ற வங்கிகளை விற்க முயல்வது மக்கள் விரோதப் போக்காகும். எனவே, தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் 85 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியைத் தனியாரிடம் விற்றால், தமிழகத்தில் விவசாயிகள், ஏழை, எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

தமிழக மக்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்க உறுதுணையாக இருக்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியைத் தனியாருக்கு விற்பனை செய்யும் மோடி அரசின் சர்வாதிகார, எதேச்சதிகார, மக்கள் விரோத நடவடிக்கைக்கு எதிராக மக்களும், அனைத்துக் கட்சியினரும், அமைப்புகளும் ஓரணியில் திரண்டு போராட முன்வரவேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: