சிறப்பு டி.ஜி.பி. மீதான பாலியல் வழக்கு!: புலன் விசாரணையை முடித்து 6 வாரத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: சிறப்பு டி.ஜி.பி. மீதான பாலியல் புகார் வழக்கில் புலன் விசாரணையை முடித்து 6 வாரத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டி.ஜி.பி.க்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. 

இந்த வழக்கின் விசாரணை நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அச்சமயம் காவல்துறை சார்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, கடந்த ஏப்ரல் மாதத்திற்கு பின் இரண்டு அதிகாரிகளிடம் மறுவிசாரணை நடத்தப்பட்டதாகவும் அதன் அடிப்படையில் 5 அதிகாரிகள், 2 பிற சாட்சிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

இதுவரை மொத்தம் 113 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும், ஊரடங்கு காரணமாக தடயவியல் அறிக்கை பெற முடியவில்லை என்றும் குறிப்பிட்டார். தடயவியல் அறிக்கை 3 வாரங்களில் கிடைத்துவிடும் என்பதால்  புலன் விசாரணையை முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய 6 வார கால அவகாசம் வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். 

அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், பாலியல் புகாரை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள விசாகா கமிட்டி தன்னுடைய அறிக்கையை ஏற்கனவே உள்துறை செயலாளரிடம் சமர்பித்துவிட்டதாகவும் அதன் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். 

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சிறப்பு டி.ஜி.பி. மீதான  புலன் விசாரணையை முடித்து 6 வாரங்களில் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 30ம் தேதிக்கு ஒத்திவைத்தார். 

Related Stories: