ஊரடங்கு தளர்வுகளால் நெல்லையில் சூடுபிடிக்கும் மண்பாண்ட தொழில்

*பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்க வலியுறுத்தல்

நெல்லை : தமிழகத்தில் கொரோனா 2வது அலை, கடந்த மே மாதத்தில் உச்சத்தை தொட்டது. தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. இதனால் கடைகள், வணிக, தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. அரசு மற்றும் தனியார் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது. மண்பாண்ட பொருட்கள் தயாரிப்பு உள்ளிட்ட தொழில்களும் முடங்கின. தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து சலூன், டீக்கடைகள், வாகன விற்பனை நிலையங்கள், வாகன பழுதுபார்க்கும் கடைகள், உதிரிபாக விற்பனை கடைகள் திறக்கப்பட்டன.

 இதன் தொடர்ச்சியாக நெல்லை மாவட்டத்தில் மண்பாண்ட உற்பத்தி செய்யப்படும் மேலப்பாளையம் குறிச்சி, சேரன்மகாதேவி அருகே காருக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் பானை, சட்டி, குடிநீர் குவளை, அகல்விளக்கு உள்ளிட்ட மண்பாண்ட பொருட்கள் தயாரிப்பில் தொழிலாளர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர்.

இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறுகையில், ஆண்டுதோறும் மழை காலத்தில் மண்பாண்ட தொழில்கள் பாதிக்கப்படும். ஆனால் கடந்தாண்டும், இந்தாண்டும் கொரோனா ஊரடங்கால் தொழில்கள் இன்றி எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

 தற்போது 27 மாவட்டங்களில் கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மண்பாண்ட தயாரிப்பு தொழில் சூடுபிடித்துள்ளது. மண் பானைகள், சாம்பிராணி கரண்டி, அகல்விளக்கு, தண்ணீர் ஜாடி, குவளை, பூந்தொட்டி தயாரிப்பு பணியை தொடங்கி உள்ளோம். மண்பாண்ட பொருட்கள் தயாரிப்பிற்கு தேவையான மண் இல்லாத நிலை தொடர்கிறது. மண் அள்ளவும், தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்வதற்காக பிற பகுதிகளுக்கு கொண்டு செல்ல தேவையான வாகன வசதிகள் இல்லை. எனவே தொ ழிலாளர்கள் தயாரிக்கும் மண்பாண்ட பொருட்களை விற்பனைக்கு பிற மாவட்டங்களுக்கு கொண்டு செல்ல தடையில்லா வாகன வசதியை அரசு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும், என்றனர்.

Related Stories: