சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய கிஷோர் கே.சாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: நடிகை ரோகிணி ஆன்லைனில் புகார்

சென்னை: சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய கிஷோர் கே.சாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை ரோகிணி போலீஸ் கமிஷனருக்கு ஆன்லைனில் புகார் அளித்துள்ளார். முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி என பல்வேறு தலைவர்கள் குறித்து தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் அவதூறாக கருத்துகளைப் பதிவிட்டு வந்தவர் யூடியூபர் கிஷோர் கே. சாமி. கடந்த 10ம் தேதி காஞ்சிபுரம் திமுகவின் ஐடி பிரிவினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்தனர். அவர், தற்போது நீதிமன்ற காவலில் செங்கல்பட்டு சிறையில் உள்ளார்.

இந்நிலையில் பெண் பத்திரிகையாளர்களை அவமதிக்கும் வகையில் கருத்துகளைப் பதிவிட்ட வழக்கில் போலீசார் தற்போது அவரை கைது செய்துள்ளனர். 8 பெண் பத்திரிகையாளர்கள் உட்பட 12 பேர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். ஏற்கனவே சிறையில் உள்ள கிஷோர் கே.சாமியை இந்த வழக்கில் 14 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்நிலையில் நடிகை  ரோகிணி நேற்று போலீஸ் கமிஷனருக்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில்  கடந்த 2014ம் ஆண்டு கிஷோர் கே.சாமி  பேஸ்புக் வலைதள பக்கத்தில் மறைந்த நடிகர் ரகுவரன் மற்றும் என்னை பற்றியும் இழிவுபடுத்தும் வகையில் கருத்தை பதிவிட்டிருந்தார்.

இந்த தவறான கருத்துகளால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது.  எனவே அவதூறு பரப்பும் வகையில் கருத்துகளை பதிவிட்டிருந்த கிஷோர் கே.சாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரோகிணி குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில்  நடிகை ரோகிணி அளித்துள்ள புகார் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அது சம்பந்தமாக விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் கிஷோர் கே.சாமி முன்னாள் முதல்வர்கள், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்தும், பெண் பத்திரிகையாளர் குறித்தும் அவதூறு பரப்பும் வகையில் கருத்துகளை பதிவிட்டதாக போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: