சசிகலாவுக்கு எதிராக எடப்பாடி கூட்டத்தில் அதிமுக தீர்மானம்: சேலம், விழுப்புரம், மதுரை மாவட்ட நிர்வாகிகள் நடவடிக்கை

சென்னை: சசிகலாவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் உள்ள பல மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டங்களில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. சேலத்தில் எடப்பாடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் தேர்தல் முடிவுக்கு பிறகு அதிமுக, அமமுக தொண்டர்களிடம் சசிகலா போனில் தொடர்பு கொண்டு பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இது வலைதளங்களில் வெளியிடப்படுகிறது. ஆரம்பத்தில் அமமுகவினருடன் மட்டுமே அவர் பேசி வருகிறார் என்று அதிமுக தலைமை அறிவித்தது. இதற்கிடையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் சசிகலாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் அவருடன் பேசியதாக, முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 17பேர், ஒரே நாளில் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சசிகலா மீண்டும் அதிமுக தொண்டர்களுடன் பேசி வருகிறார். இதையடுத்து தமிழகம் முழுவதும் அதிமுக மாவட்ட கூட்டங்களை கூட்டி சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி சேலம் புறநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமை வகித்தார். இதில் மாநில அமைப்பு செயலாளர் செம்மலை, ஜெ.பேரவை மாவட்ட செயலாளர் இளங்கோவன் மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் புயல்வீசும், அனைத்தும் தகர்ந்து போய்விடும், இனி தமிழ்நாட்டில் குழப்பம்தான் மிஞ்சும் என்று எண்ணியவர்களுக்கு ஏமாற்றத்தை பரிசளித்து, கட்சியை வழிநடத்திச் செல்லும் ஒருங்கிணைப்பாளருக்கும், துணை ஒருங்கிணைப்பாளருக்கும் பாராட்டு தெரிவிக்க வேண்டும். சட்டமன்றத் தேர்தலின்போது அரசியலில் இருந்து முழுமையாக விலகி இருப்பதாக செய்தி வெளியிட்டார் சசிகலா. பொதுத்தேர்தல் முடிவுக்கு பிறகு ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் வலிவும், பொலிவும் தொண்டர் படையும், மக்கள் செல்வாக்கும் இருப்பதை பார்த்து அரசியலில் முக்கியத்துவம் தேடிக்கொள்ள முனைகிறார். கட்சியை அபகரிக்கும் முயற்சியில் இறங்கப்போவதாக, ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் சிலருடன் பேசுவதாக வினோதமான ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்.

இவர் கட்சியில் அடிப்படை உறுப்பினராகக்கூட இல்லை. சசிகலா தொலைபேசியில் பேசும் போது சாதிய உணர்வுகளை தூண்டுவது, ஒரு தாய் வயிற்று பிள்ளைகளாக வாழ்ந்து வரும் தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இதற்காக கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் அதிமுகவுக்கும், சசிகலாவுக்கும் எந்த தொடர்போ, சம்பந்தமோ இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். தொண்டர்களின் உழைப்பை சுரண்டும் ஒட்டுண்ணிகளாகவும், நற்பெயரை அழிக்கும் நச்சுக் களைகளாகவும், தங்களை வளப்படுத்திக் கொண்ட ஒரே குடும்பத்தினர் மீண்டும் அதிமுகவை அபகரித்து விடலாம் என்று வஞ்சக வலை விரிக்கின்றனர்.

மகத்தான தலைவர்களால் புகழ்பெற்றுள்ள அதிமுக, ஒரு குடும்பத்தின் அபிலாஷைகளுக்காக ஒரு போதும் தன்னை அழித்துக் கொள்ளாது என்று நினைவு படுத்துகிறோம். சசிகலாவிடம் தொலைபேசியில் உரையாடி கட்சியின் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தியவர்கள் உடனடியாக நீக்கப்பட்டுள்ளனர். இப்படி நடவடிக்கைக்கு உட்பட்டவர்கள், கட்சி தலைமை மீது சேற்றை வாரி பூசி, தவறான பேட்டி அளித்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம், கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான சி.வி.சண்முகம் தலைமை தாங்கினார். எம்எல்ஏக்கள் சக்ரபாணி, அர்ச்சுணன் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், வலிவோடும், பொலிவோடும் பீடுநடைபோட்டுக்கொண்டிருக்கும் அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுவரும், இந்த மாபெரும் மக்கள் இயக்கத்தில் அடிப்படை உறுப்பினராககூட இல்லாத, உறுப்பினராகும் தகுதிகூட இல்லாத, ஊழல் வழக்கில் நான்கு ஆண்டுகாலம் சிறைதண்டனை அனுபவித்தவருமான சசிகலா மற்றும் அவரது குடும்பத்தைச் சார்ந்தவர்களையும் விழுப்புரம் மாவட்ட அதிமுக கண்டிக்கிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக கூட்டம் நேற்று மாவட்ட செயலாளர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றதாகவும், முன்னாள் எம்எல்ஏ தென்னரசு முன்னிலை வகித்ததாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் கசியவிடப்பட்டது. கூட்டத்தில் அதிமுகவை கைப்பற்றி, தனது குடும்ப சொத்தாக மாற்ற சசிகலா நாடகமாடி வருவதாக கூறி கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் இதை உறுதி செய்ய கட்சியின் முன்னாள் எம்எல்ஏ தென்னரசுவை தொடர்பு கொண்டபோது தனக்கு எதுவும் தெரியாது என்று ஒதுங்கிக்கொண்டார்.

மதுரை:  மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே குன்னத்தூர் ஜெயலலிதா கோயிலில், மதுரை மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமை வகித்தார். உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், ‘‘தேர்தலுக்கு முன்பு அரசியலை விட்டு ஒதுங்கிக் கொள்வதாக அறிவித்த சசிகலா, தற்போது அரசியல் முக்கியத்துவத்தை தேடிக்கொள்ள கட்சியை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஒவ்வொரு நாளும் போனில் பேசி விநோதமான நாடகத்தை அரங்கேற்றி வருகிறார். சசிகலாவுடன் போனில் பேசி அதிமுகவின் வளர்ச்சிக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் அனைவரையும் கட்சியை விட்டு நீக்க வேண்டும். இனி யாரேனும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையை கட்சி தலைமை எடுக்க வேண்டும்’’ என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சசிகலாவிடம் தொலைபேசியில் உரையாடி கட்சியின் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தியவர்கள் உடனடியாக நீக்கப்பட்டுள்ளனர். இப்படி நடவடிக்கைக்கு உட்பட்டவர்கள், கட்சி தலைமை மீது சேற்றை வாரி பூசி, தவறான பேட்டி அளித்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

* சசிகலா குடும்பம் அடித்த கொள்ளைக்கு பழி ஏற்று சிறை சென்றார் ஜெயலலிதா: சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் சி.வி.சண்முகம் பேசியதாவது: சசிகலா குடும்பத்திற்கும், இந்த இயக்கத்திற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்பதை, உச்ச நீதிமன்றம் வரை சென்று தெளிவுபடுத்தப்பட்டுவிட்டது. ஆனால், தற்போது ஒரு நாடகத்தை நடத்திக்கொண்டு, தினந்தோறும் தொலைபேசி மூலமாக பேசி, நான் வருகிறேன், வருகிறேன் என்று நாடகம் நடத்திக் கொண்டும், வேஷம் போட்டுக் கொண்டு வருகிறார். தொண்டர்களையும், அதிமுகவையும் ஏமாற்றி மீண்டும் கொள்ளையடிக்கலாம் என்ற சசிகலாவின் கனவு எந்தகாலத்திலும் நிறைவேறாது. ஜெயலலிதா ஏன் சிறைக்கு சென்றார்?. இந்த குடும்பம் அடித்த கொள்ளையால், அத்தனை பழிகளையும் ஜெயலலிதா ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலை வந்தது. நம் கூட இருந்தே, இந்த இயக்கத்தால் வளர்ந்தவர்கள், இயக்கத்தால் அதிகார பதவியை ருசித்தவர்கள், தங்களை வளப்படுத்திக்கொண்ட அந்த துரோகிகளை நினைவு வைத்துக் கொண்டு நாம் ஜாக்கிரதையாக செயல்படவேண்டும். அப்படிப்பட்ட சசிகலாவும் குறிப்பாக மன்னார்குடி கும்பலை எந்தநிலையிலும், எந்தசூழ்நிலையிலும் நெருங்கவிடக்கூடாது. இவ்வாறு அவர்கூறினார்.

Related Stories: