நிர்வாகிகள் தொடர்ந்து வெளியேறுவதால் அதிர்ச்சி தமாகா மாவட்ட தலைவர் திடீர் ராஜினாமா: திமுகவில் இணைய உள்ளதாக தகவல்

சென்னை: சென்னை மாவட்ட தமாகா தலைவர் திடீரென ராஜினாமா செய்துள்ளார். சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து தமாகா போட்டியிட்டது. 6 சட்டமன்ற தொகுதிகள் தமாகாவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. தமாகாவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை அதிமுக தலைமை ஒதுக்கவில்லை என்று தமாகாவினர் குற்றம்சாட்டினர். இந்த சூழ்நிலையில், மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர் அண்ணாநகர் ராம்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரை தொடர்ந்து இளைஞர் அணியை சேர்ந்த கார்த்திக், விருகை முத்து, சைதை துரைராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். ராஜினாமா குறித்து அண்ணா ராம்குமார் கூறுகையில்,‘‘ தேர்தல் முடிந்த உடன் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளதாக இளைஞரணி தலைவர் யுவராஜ் போஸ்டர் அடித்திருந்திருந்தார்.

அதில் தலைவர் பெயரோ, படமோ இடம் பெறவில்லை. தலைவர் படம் இல்லாமல் எப்படி போஸ்டர் அடிக்கலாம் என்று கேள்வி கேட்டேன். அவர் மீது நடவடிக்கை எடுப்பதை விட்டு என் மீது நடவடிக்கை எடுத்தனர். அதனால் தான் மாவட்ட தலைவர் பதவியை ராஜினமா செய்தேன்’’ என்றார்.  இதற்கிடையே, கோவை தங்கம் முன்னிலையில் இன்னும் மாவட்ட தலைவர்கள் பலர் விரைவில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாவட்ட தலைவர் ராஜினாமா குறித்து, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்.‘‘ மத்திய சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் ராம்குமார் கட்சியின் விதிகளுக்கு மாறாக செயல்பட்டதால் உடனடியாக மாவட்ட தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக சென்னை மாமன்ற முன்னாள் உறுப்பினர் கோவிந்தசாமி மத்திய சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் (பொறுப்பு) ஆக நியமிக்கப்படுகிறார்’’ என கூறியுள்ளார்.

Related Stories:

>