முதல்வராக பதவியேற்ற பின் முதல்முறையாக டெல்லி பயணம் மு.க.ஸ்டாலின் மோடியுடன் சந்திப்பு

* நீட் தேர்வு ரத்து, கூடுதல் தடுப்பூசி, ஜிஎஸ்டி நிலுவைத்தொகை உள்ளிட்ட 25 முக்கிய கோரிக்கை மனுக்களை அளித்தார்

* மாநில வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக பிரதமர் உறுதி

புதுடெல்லி: பிரதமர் மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை சந்தித்து, நீட் தேர்வு ரத்து, கூடுதல் தடுப்பூசி, ஜிஎஸ்டி நிலுவைத் தொகை வழங்குதல் உள்ளிட்ட 25 முக்கிய கோரிக்கைகளை வைத்தார். அப்போது, தமிழக வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக பிரதமர் உறுதியளித்ததாக முதல்வர் தெரிவித்தார். தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் கடந்த மே மாதம் 7ம் தேதி பதவியேற்றார். அப்போது கொரோனா 2ம் அலை என்பது தீவிரமாக இருந்ததன் காரணமாக, பதவியேற்ற நாளில் இருந்து அவரது அமைச்சரவை, தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் அதிதீவிரமாக ஈடுபட்டு வந்தது. மேலும் அதற்கான மருத்துவ ஆக்சிஜன், கொரோனா தடுப்பூசி மற்றும் மருந்துகள் தேவை பற்றி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கோரிக்கைகளை பலமுறை கடிதங்கள் மூலம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்து வந்த துரித நடவடிக்கையால் தமிழகத்தில் தற்போது கொரோனா நோய் தொற்று பரவல் படிப்படியாக மிகவும் குறைந்தது மட்டுமில்லாமல், நேற்றைய ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கையானது 9 ஆயிரமாக குறைந்துள்ளது. வழக்கமாக மாநில முதல்வர்கள் பதவியேற்றதும், தலைநகர் டெல்லி வந்து பிரதமரை சந்தித்து பேசுவது வழக்கம். ஆனால், கொரோனா தொற்று அதிகரித்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக டெல்லி முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் முதல்வர் முக.ஸ்டாலின் நேற்று காலை 7.15 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு வந்தார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், செயலாளர்கள் உதயசந்திரன் மற்றும் உமாநாத் ஆகியோரும் சென்றனர். இதையடுத்து, நேற்று காலை சரியாக 10.30 மணிக்கு டெல்லி இந்திரா காந்தி விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது அவருக்கு நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், தமிழக நீர்வள துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் எம்பி கனிமொழி ஆகியோர் பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்றனர்.

இதையடுத்து அங்கிருந்து நேராக ஐ.டி.ஓ பகுதியில் கட்டப்பட்டு வரும் திமுக கட்சி அலுவலகமான அறிவாலயத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றார். அப்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர். இதையடுத்து, கட்டிடப் பணிகள் அனைத்தையும் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக ஆய்வு செய்த முதல்வர், அங்கிருந்து சாணக்கியாபுரியில் இருக்கும் புதிய தமிழ்நாடு இல்லத்திற்கு சென்றார். அங்கு அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு இல்லம் வந்த முதல்வருக்கு, போலீஸ் மரியாதையும் அளிக்கப்பட்டது. இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக் கொண்டார்.

இதையடுத்து டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, அமைச்சர் துரைமுருகன், எம்பிக்கள் தயாநிதி மாறன், டி.கே.எஸ்.இளங்கோவன், தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி, கௌதம சிகாமணி, ஞானதிரவியம், எம்.குமார் உட்பட அனைத்து திமுக எம்பிக்களும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்தும், புத்தகங்களை வழங்கியும் வரவேற்றனர். இதையடுத்து, இல்லத்தின் முதல் மாடியில் உள்ள முதல்வருக்கான அறைக்கு சென்றவர்,  அங்கு திமுக அனைத்து எம்பிக்களிடமும் ஆலோசனை மேற்கொண்டார்.

இதையடுத்து சிறிது நேரம் ஓய்வுக்கு பின்னர் சரியாக மாலை 4.35மணிக்கு தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார். அப்போது தலைமை செயலாளர் இறையன்பு, அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோரும் உடன் சென்றனர். டெல்லி லோக் கல்யான் மார்க்கில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி இல்லத்திற்கு சென்றார். சரியாக நேற்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். அப்போது பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்தார். மோடியும், முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தார். பிறகு இருவரும், தமிழக நலத்திட்டங்கள் மற்றும் கோரிக்கைகள் குறித்து பேசினர். இந்த சந்திப்பு சுமார் 25 நிமிடங்கள் நடைபெற்றது. இப்போது 25 கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் வழங்கினார்.

அந்த மனுவில் உள்ள கோரிக்கைகள் விவரம் வருமாறு:

நீர் ஆதார திட்டங்கள்

* கர்நாடக அரசு செயல்படுத்திவரும் மேகதாது திட்டத்தை செயல்படுத்த கூடாது.

* முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவது.

* ஆறுகள் இணைப்பு திட்டம் (கோதாவரி-காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம்)

*  உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நடப்பு ஆண்டில் தமிழகத்திற்கு தரவேண்டிய காவிரி நீர்.

மீன்வளம்

* பாக் ஜலசந்தி பகுதியில் பாரம்பரியமாக மீன் பிடித்துவரும் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்தல்.

* கச்ச தீவை மீட்டு, தமிழக மீனவர்களுக்கு கச்சத்தீவு கடல் பகுதியில் பாரம்பரிய மீன் பிடி உரிமையை திரும்ப பெற்றுத் தருவது.

* மீனவர்கள் நலனுக்காக தேசிய கமிஷன் அமைப்பது.

மின்சாரம்

* மின் திட்டங்களுக்காக நிலக்கரி வழங்குவதில் உள்ள சிக்கலை தீர்ப்பது.

* சிறப்பு திட்டத்திற்கான நிதி வழங்குவதை துரிதப்படுத்துவது.

* 2020ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மின்சார சட்ட திருத்தத்தை ரத்து செய்வது.

நிதி

* செஸ் மற்றும் சர்சார்ஜ் தொகையை மாநிலங்களுக்கு பிரித்து தருவது.

* 15வது நிதிக்குழுவால் மாநிலங்களுக்கு ஏற்பட்டுள்ள தாக்கம்.

* 14வது நிதிக்குழுவின் பரிந்துரையின்படி தரப்படவேண்டிய நிலுவை தொகை.

* ஜிஎஸ்டி தொகையில் தமிழகத்திற்கு வரவேண்டிய நிலுவைத் தொகை.

* மத்திய வரியிலிருந்து 1996-97 முதல் 2014-15 வரையில் தமிழகத்திற்கு வழங்கப்படாத பாக்கி தொகை.

* தமிழகத்திற்கான தேசிய கட்டமைப்பு முதலீட்டு நிதி, எஸ்டிஆர்எப் ஒதுக்கீடு ஆகிய நிதி உதவி திட்டங்களுக்கு விரைவான ஒப்புதல்.

சுகாதாரம்

* நீட் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளை கைவிடுதல்.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டிடப்பணியை விரைந்து நடத்துதல்.

* தமிழகத்திற்கு போதுமான கொரோனா தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்தல்.

* உயிர் காக்கும் மருந்துகளை போதுமான அளவில் தமிழகத்திற்கு வழங்குதல்.

* மருத்துவ படிப்பில் (யுஜி, பிஜி) அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்குதல்.

விவசாயம்

* பிரதம மந்திரி பஷல் பீமா யோசனா திட்டத்தை செயல்படுத்துதல்.

*  3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுதல்.

உணவு

*  தனி பயன்பாட்டு அரிசிக்கான மானியத்தை வழங்குதல்.

தொழிற்சாலைகள்

* செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்தி நிறுவனம் (ஹில் பயோடெக்), குன்னூர் பாஸ்டிர் மையம் ஆகியவற்றை தொடங்குதல்.

* மிகப்பெரிய ஜவுளி பூங்காவுக்கு ஒப்புதல்.

* சேலம் இரும்பு எக்கு ஆலையில் உள்ள கூடுதல் இடத்தை ராணுவ தொழிற்சாலை பூங்கா அமைக்க ஒதுக்குதல்.

பள்ளிக்கல்வி

* தேசிய கல்வி கொள்கையை திரும்ப பெறுதல்.

* அனைவருக்கும் கல்வி திட்டம், ராஸ்டிரிய மத்தியமிக் சிக்‌ஷா அபியான், மாடல் பள்ளித்திட்டத்தை ராஸ்டிரிய மத்தியமிக் சிக்‌ஷா அபியான் திட்டத்துடன் இணைத்தல்.

* கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் உள்ள குழந்தைகளுக்கு இலவச படிப்புரிமையை அமல்படுத்துதல்.

சிறு குறு தொழில்கள்

* சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு நிவாரண நிதி வழங்குதல்.

* சென்னை மெட்ரோ ரயில் - நிலுவையில் திட்டம் மற்றும் கொள்கை:

* சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2ம் பகுதிக்கான திட்டத்தில் 50:50 என்ற விகிதாச்சார அடிப்படைக்கு ஒப்புதல் வழங்க வேண்டும்.

* மெட்ரோ ரயில் திட்டத்திற்காக நிலங்களை ஒப்பந்த அடிப்படையில் கையகப்படுத்துவது.

இலங்கை தமிழர்கள் பிரச்னை

* ஈழத் தமிழர்களுக்கு பொதுவாழ்வு மற்றும் அரசியலில் சம உரிமை.

பிற்படுத்தப்பட்டோர் நலன்

* கண்டறியப்பட்ட பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான வருமான வரம்பை திரும்ப பெறுதல்.

* மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின பிரிவினருக்கு அந்தந்த மாநிலங்கள் ஒதுக்கீடு செய்யும் வகையிலான சட்ட திருத்தம்.

நெடுஞ்சாலை திட்டங்கள்

* சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்தக்கூடாது.

* சென்னை மதுரவாயல்-சென்னை துறைமுகம் மேம்பால சாலை திட்டத்தை விரைவு படுத்துதல்.

* சென்னை விமான நிலையத்திலிருந்து செங்கல்பட்டுவரையிலான மேம்பால திட்டம்.

* சென்னை துறைமுகம்-திருவொற்றியூர் கடல் பால திட்டத்தை செயல்படுத்துதல்.

* சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரையிலான 6/8 வழி நெடுஞ்சாலை திட்டம்.

தூத்துக்குடி துறைமுக பொருளாதார வளர்ச்சி விரிவாக்கம்

* தூத்துக்குடி துறைமுகம் விரிவாக்கம்

* சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்துதல்.

நீதித்துறை

* உச்ச நீதிமன்ற கிளையை சென்னையில் நிறுவுதல்.

 விமான நிலைய கட்டமைப்பை தரம் உயர்த்துதல்

* சென்னையில் சர்வதேச தரத்துடன் கூடிய புதிய பன்னாட்டு விமான நிலையம்.

* மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக அறிவித்தல்.

* சேலம் மற்றும் தூத்துக்குடி விமான நிலையங்களை நவீனப்படுத்தி விரிவு படுத்த வேண்டும்.

* நாடாளுமன்றம் மற்றும் சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வருதல்.

* மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தில் வழங்கப்படும் வேலை வாய்ப்பு நாட்களை 150 நாளாக அதிகரித்தல்.

* நகர்புற வேலை திட்டத்தை கொண்டுவருதல்.

* தமிழகத்திற்கு புதிய ரயில் திட்டங்களை கொண்டுவருதல்.

* குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறுதல்.

* அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீடு வாரியத்தை சென்னையில் தொடர அனுமதித்தல்.

* ஹைட்ரோ கார்பன் மற்றும் நியூட்ரினோ திட்டத்தை கைவிடுதல்.

* சுற்றுச்சூழல் தாக்க வரைவு மசோதா 2020ஐ திரும்ப பெறுதல் உள்ளிட்ட 25 கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அளித்து கோரிக்கைகளை விரைந்து செயல்படுத்துமாறு தெரிவித்துள்ளார். இதையடுத்து மீண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு இல்லத்திற்கு திரும்பினார். அப்போது நிருபர்களிடம் கூறும்போது, பிரதமர் மோடி தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக தெரிவித்தார் என்றார். தமிழ்நாடு இல்லத்தில் இருந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் டி.ராஜா ஆகியோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்து ஆலோசனை மேற்கொண்டனர். நேற்று இரவு தமிழ்நாடு இல்லத்திலேயே மு.க.ஸ்டாலின் தங்கினார். இன்று 2வது நாளாக, டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்திக்க உள்ளதாக தெரிய வருகிறது. இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிற்பகலுக்கு பின் சிறப்பு விமானம் மூலம் இன்று மாலை சென்னை திரும்புகிறார்.

* தேசிய நூலாக திருக்குறள்

பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த 25 கோரிக்கைகளில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு முக்கிய இடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அலுவலக மொழிகளில் தமிழை அறிவித்தல் மற்றும் உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்குதல், தமிழக மக்களுக்கு மத்திய அரசு பணிகளில் முன்னுரிமை அளித்தல், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை மேம்பாடடைய செய்தல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார். மேலும் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

Related Stories: