பிறந்து சில நாட்களே ஆன நிலையில் வளர்க்க மனமின்றி மகளை மரப் பெட்டிக்குள் வைத்து கங்கையில் விட்ட தாய்: கர்ணன் படத்தில் வரும் காட்சியை நினைவு கூர்ந்தது

காசிப்பூர்,: பிறந்து சில நாட்களே ஆன  பெண் குழந்தையை வளர்க்க மனமின்றி மரப்பெட்டிக்குள் வைத்து கங்கை நதியில் விட்டதால், அந்த குழந்தை படகோட்டிகள் மூலம் மீட்கப்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் காசிப்பூர் மாவட்டம் தாத்ரி வனப்பகுதியை ஒட்டிய கங்கை நதியில் மரப்பெட்டி ஒன்று மிதந்து வருவதை படகோட்டிகள் பார்த்தனர். அந்த பெட்டிக்குள் குழந்தை அழுகின்ற குரல் கேட்டதால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக, மிதந்து சென்ற மரப்பெட்டியை கைப்பற்றி, கரைக்கு கொண்டு வந்தனர். மரப் பெட்டியை திறந்து பார்த்தால், அந்த பெட்டிக்குள் பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை இருந்தது. அதிர்ச்சியடைந்த அவர்கள், குழந்தையை கையில் எடுத்து கொஞ்சினர். மேலும் அந்த பெட்டிக்குள் சில சாமிகள் படமும், குழந்தையின் ஜாதகமும் இருந்தது. கங்கை நதியில் குழந்தை மீட்கப்பட்ட தகவல்  போலீசாருக்கு தெரியவந்தது. அதையடுத்து, அவர்கள் அந்த குழந்தையை மீட்டு அப்பகுதியில்  செயல்படும் ஆஷா ஜோதி கேந்திரா இல்லத்தில் சேர்த்தனர். அடுத்த நாள் காலை காசிப்பூர் மாவட்ட கலெக்டர் எம்.பி. சிங் தலைமையிலான அதிகாரிகள் அந்த இல்லத்திற்கு வந்தனர். அவர்கள், குழந்தையை நதியில் இருந்து காப்பாற்றிய மல்லா குலுவை பாராட்டினர்.

அப்போது கலெக்டர் மல்லாவிடம், ‘உங்களுக்கு என்ன உதவி வேண்டும்? ’ என்று கேட்டார். அதற்கு அவர், ‘எனது வீட்டிற்குச் செல்லும் பாதை மோசமாக உள்ளது. எனது படகும் மிகவும் சேதமடைந்துவிட்டது’ என்றார். இதற்கிடையே, உத்தரபிரதேச அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘கங்கை நதியில் மரப்பெட்டியில் மிதந்து வந்த பெண் குழந்தைக்கான செலவை அரசே ஏற்கும். சிறுமியைக் காப்பாற்றிய படகோட்டிக்கு படகு ஒன்று வழங்கப்படும். அத்துடன் வீட்டிற்குச் செல்ல ஒரு நடைபாதை அமைக்கப்படும்’ என்று அறிவிக்கப்பட்டது. மகாபாரதத்தின் புராண கால கர்ணன் படத்தில், அவரது தாய் குந்திதேவி தனது மகனை ஒரு பேழையில் (மரப்பெட்டி) வைத்து ஆற்றில் வைத்து விடுவது போன்று, உத்தரபிரதேசத்தை சேர்ந்த இந்த தாயும் தன் மகளை வளர்க்க மனமின்றி, மரப்பெட்டிக்குள் வைத்து கங்கையில் விட்டிருப்பதாக உத்தரபிரதேச மக்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர்.

Related Stories: