100% கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை!: பெற்றோர் தயங்காமல் புகார் அளியுங்கள்...அமைச்சர் அன்பில் மகேஷ்...!!

மதுரை: 100 சதவீதம் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரித்துள்ளார். மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைப்பதற்கான இடங்கள் குறித்து அமைச்சர்கள் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மூர்த்தி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மதுரையில் சுமார் 70 கோடி ரூபாய் செலவில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் கலைஞர் நூலகம் அமைக்கப்பட உள்ளதாக கூறினார். நூலகம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட இடங்கள் குறித்து முதலமைச்சரிடம் தெரிவிக்க உள்ளதாகவும், அவரே இறுதி முடிவு எடுப்பார் எனவும் அவர் தெரிவித்தார். 

கொரோனா ஊரடங்கு காலத்திலும் சில தனியார் பள்ளிகள் முழு கட்டணம் வசூலிப்பது பற்றிய கேள்விக்கு, சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எச்சரித்தார். கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக பெற்றோர்கள் தயக்கம் இன்றி புகார் அளிக்கலாம் என்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டுக்கொண்டார். 

தமிழகத்தில் பள்ளிகள் எப்போது வேண்டுமானாலும் திறக்கப்படும் என்ற சூழலில் ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார். தாம் ஆய்வு செய்த பள்ளிகளில் பெரும்பாலான ஆசிரியர்கள், 2 டோஸ் தடுப்பூசியும் போட்டுவிட்டதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெருமிதம் தெரிவித்தார். 

Related Stories:

>