கீரப்பாக்கம் ஊராட்சியில் தட்டுப்பாட்டை தவிர்க்க கல்குவாரிகளில் தேங்கியிருக்கும் தண்ணீரை பயன்பாட்டுக்கு விநியோகிக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

கூடுவாஞ்சேரி: கீரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள 12 கல்குவாரிகளில் தேங்கியிருக்கும் தண்ணீரை சுத்திகரிக்கப்பட்டடு மக்களுக்கு விநியோகம் செய்ய கோரி தமிழக முதல்வருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், வண்டலூர் அடுத்த கீரப்பாக்கம் ஊராட்சியில், கீரப்பாக்கம், முருகமங்கலம், பெரிய அருங்கால், சின்ன அருங்கால் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு 7ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தற்போது கோடை காலம் என்பதால் கீரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள விவசாய கிணறுகளில் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீரை உறிஞ்சி ஓட்டல்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். மேலும்,  சிமெண்ட் கற்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் 15க்கும் மேற்பட்ட ராட்சத போர்வெல் அமைத்து தண்ணீரை உறிஞ்சுகின்றனர்.

இதனால் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதில், கீரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள 12 கல்குவாரிகளில் தேங்கியிருக்கும் தண்ணீரை சுத்திகரிக்கப்பட்டடு மக்களுக்கு விநியோகம் செய்ய கோரி தமிழக முதல்வருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கீரப்பாக்கம் ஊராட்சியில் 12 கல்குவாரிகள் உள்ளன. இதில் ஒவ்வொரு கல்குவாரிகள் 100 முதல் 300 அடி ஆழம் வரை உள்ளன. இதில் எந்நேரமும் தண்ணீர் நிறைந்து கடல் போல் காட்சி அளிக்கிறது. இந்த தண்ணீரை தமிழ்நாடு குடிநீர் வழங்கல் வாரியம் மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வாரியம் இணைந்து மக்கள் குடிப்பதற்கு ஏதுவாக உள்ளதா என்று கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் தேதி ஆய்வுக்காக எடுத்து சென்றனர்.

இதில் மேற்படி கல்குவாரியில் உள்ள தண்ணீரை மக்கள் குடிக்கலாம் என்று ஆய்வில் தெரிய வந்தது. இதனையடுத்து மேற்படி கல்குவாரிகளில் உள்ள தண்ணீரை சுத்திகரிக்கப்பட்டு மக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என்று கடந்த அதிமுக ஆட்சியின்போது தமிழக முதல்வர் உட்பட மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை பொதுமக்கள் வலியுறுத்தியும் இதுவரை எந்த ஒரு பயனும் இல்லை. இந்நிலையில், ஊராட்சிக்கு உட்பட்ட விநாயகபுரம் பகுதியில் 2100 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளும், முருகமங்கலம் கிராமத்தில் 2100 வீடுகளும் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்டு வருகிறது. இதில் ஏற்கனவே கீரப்பாக்கம் ஊராட்சியில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்து ஆடும் நிலையில், மேற்படி குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு முடிந்ததும் அதில் மக்கள் குடியேறினால் மேலும் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாய நிலை உள்ளது. எனவே கீரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள 12 கல்குவாரிகளிலும் தேங்கும் தண்ணீரை சுத்திகரிக்கப்பட்டு அதை மக்களுக்கு விநியோகம் செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: