மாமூல் கேட்டு தொழிலதிபரை சுட்டுக் கொன்ற வழக்கு: ஐபிஎஸ் அதிகாரியின் ₹60 கோடி பினாமி சொத்துகள் முடக்கம்?: 8 மாதமாக தலைமறைவாக இருப்பதால் உ.பி போலீஸ் தீவிரம்

லக்னோ: உத்தரபிரதேசத்தில் தொழிலதிபரிடம் மாமூல் கேட்டு தரமறுத்ததால் மர்ம கும்பலால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இவ்வழக்கில் தொடர்புடைய ஐபிஎஸ் அதிகாரி கடந்த 8 மாதமாக தலைமறைவாக உள்ள நிலையில், அவரது ரூ. 60 கோடி சொத்துகளை முடக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூரைச் சேர்ந்த 2014ம் ஆண்டு பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரி மணிலால் பட்டிதார், உத்தரபிரதேச மாநிலம் மஹோபா மாவட்ட போலீஸ் எஸ்பியாக பணியாற்றி வந்தார். கடந்தாண்டு செப்டம்பரில், அம்மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர் இந்திரகாந்த் திரிபாதி என்பவரிடம் ரூ. 6 லட்சம் மாமூல் கேட்டு அதை அவர் தர மறுத்ததால், மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது மரணம் தொடர்பான வீடியோ பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலானது.

அதனால், ஐபிஎஸ் அதிகாரி மணிலால் பட்டிதார் இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். மேலும், தொழிலதிபரின் சகோதரர் ரவிகாந்த் கொடுத்த புகாரின்பேரில், இன்ஸ்பெக்டர் தேவேந்திரா, கப்ராய் காவல் நிலைய கான்ஸ்டபிள் அருண் மற்றும் இரண்டு பேர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. கிட்டதிட்ட 8 மாதங்களாக தலைமறைவாக உள்ள மணிலால் பட்டிதார் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று உத்தரபிரதேச காவல்துறை அறிவித்துள்ளது. தலைமறைவாக உள்ள மணிலால் பட்டிதருக்கு எதிராக லக்னோ ஊழல் தடுப்பு நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது. அவரை கைது செய்வதற்காக ஐ.ஜி அளவிலான தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. எஸ்ஐடி சிறப்பு போலீஸ் அதிகாரி மற்றும் பிரயாகராஜ் எஸ்பி அசுதோஷ் மிஸ்ரா ஆகியோர், பிரிவு 174 ஏ இன் கீழ், மணிலாலுக்கு எதிராக நீதிமன்றத்தில் ஆஜராகாததற்காக வழக்குபதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே, மணிலால் பட்டிதாரை கைது செய்யாதது குறித்து, கடந்த மே மாதம் அலகாபாத் உயர்நீதிமன்றம் கடும் கருத்துக்களை தெரிவித்து இருந்தது. இருந்தும் இன்றுவரை அவரை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையே, வருவாய் துறை மூலம் மணிலால் பட்டிதாரின் சொத்து மற்றும் அவரது பினாமி சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக ராஜஸ்தானில் உள்ள மணிலால் பட்டிதாரின் 5 சொத்துக்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுகுறித்து பிரயாகராஜ் போலீஸ் எஸ்பி (கிரைம்) அசுதோஷ் மிஸ்ரா கூறுகையில், ‘மணிலால் பட்டிதர் தந்தை ராம்ஜி பட்டீதரின் பெயரில், ராஜஸ்தானில் உள்ள பிளாட், கடை, வீடு உள்ளிட்ட மூன்று சொத்துக்களுடன் சேர்த்து 5 பினாமி சொத்துகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.60 கோடி இருக்கும்.  தப்பி ஓடிய குற்றவாளிகளை தேடி வருகிறோம். அவரது அனைத்து சொத்துக்களையும் முடக்க, தேவையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன’ என்றார்.

Related Stories:

>