2 நாள் அரசு முறை பயணமாக டெல்லி புறப்பட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்; இன்று மாலை பிரதமர் மோடியுடன் சந்திப்பு

சென்னை: 2 நாள் அரசு முறை பயணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார். இன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ள முதல்வர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளார். பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார். அப்போது, கூடுதல் தடுப்பூசிகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்துகிறார். தமிழகத்தில் தற்போது மத்திய அரசு தொடர்புடைய நீட் தேர்வு பிரச்சினை, ஹைட்ரோ கார்பன், 7 பேர் விடுதலை குறித்து பேச உள்ளார். தற்போது தமிழகத்தில் செலவீனம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திற்கு மத்திய அரசு தர வேண்டிய ஜி.எஸ்.டி. பாக்கித்தொகை பற்றியும் பேச உள்ளார். 

நாளை காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஏற்கனவே டெல்லியில் உள்ளார். டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயனும் அங்கு இருக்கிறார். தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, உள்துறை செயலாளர், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு இயக்குனர் உள்ளிட்ட சில அதிகாரிகள் டெல்லி சென்றுள்ளனர். 

Related Stories: