தெலங்கானா மாநிலத்தில் கொரோனாவுக்கு கூடுதல் கட்டணம் தனியார் மருத்துவமனையில் மோசடி: பணத்தை திருப்பி அளிக்க உத்தரவு

திருமலை: தெலங்கானாவில் தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதை ஆய்வு செய்த கூடுதல் கலெக்டர், கூடுதலாக வசூலித்த பணத்தை நோயாளிகளுக்கு திருப்பி அளிக்கும்படி அதிரடியாக உத்தரவிட்டார். தெலங்கானா மாநிலம், சித்திப்பேட்டை நகரத்தில் ஒரு தனியார் மருத்துவமனை உள்ளது. இதில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்காக கூடுதல் கட்ணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் வந்தன. இது தொடர்பாக நேற்று,  கூடுதல் கலெக்டர் முசம்மில் கான் அந்த மருத்துவமனையில் திடீரென ஆய்வு செய்தார். அப்போது, மருத்துவமனையின் உரிமையாளர் மருத்துவர் கணேஷ் இல்லாததால்  கூடுதல் கலெக்டரை 10 நிமிடங்கள் காத்திருக்கும்படி  ஊழியர்கள் தெரிவித்தனர். அப்போது, மருத்துவமனையில் உள்நோயாளிகள், புறநோயாளிகள் வருகை பதிவு, எவ்வளவு கட்டணம் வசூல் செய்யப்பட்டது என்பதை கூடுதல் கலெக்டர் ஆய்வு செய்தார்.

பின்னர், சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட   நோயாளிகளை தொலைபேசியில் அவர் அழைத்து பேசினார்.  இதில், ‘சிகிச்சைக்கு எவ்வளவு பணம் செலுத்தினீர்கள்?’  என கேட்டறிந்தார். இதில், மாநில அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணத்தை மருத்துவமனை நிர்வாகம் வசூல் செய்ததை கண்டுபிடித்தார். இதைத் தொடர்ந்த, கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை நோயாளிகளிடம் திருப்பி தரும்படி மருத்துவமனை நிர்வாகத்துக்கு அவர் அதிரடியாக உத்தரவிட்டார். நோயாளியிடமும் கூடுதலாக செலுத்திய பணத்தை மருத்துவமனைக்கு வந்து பெற்றுக் கொள்ளும்படி தகவல் கொடுத்தார்.

மருத்துவமனை நிர்வாகம் இந்த பணம் திருப்பி தராமல் தாமதம் செய்தாலோ, மீண்டும் கூடுதல் கட்டணம் வசூலித்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: