கர்நாடக பாஜ.வில் மோதல் மத்திய அமைச்சருடன் மோடி ரகசிய பேச்சு; எடியூரப்பா பதவி தப்புமா?

பெங்களூரு: கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து மத்திய அமைச்சர்  சதானந்த கவுடாவுடன் ரகசியமாக ஆலோசனை நடத்திய பிரதமர் நரேந்திர மோடியின்  நடவடிக்கையால், மேலிட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையில் பாஜ ஆட்சி நடக்கிறது. தற்போது, எடியூரப்பாவுக்கு எதிராக பல பாஜ எம்எல்ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இதனால், ‘மேலிடம் கூறினால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன்,’ என்று முதலில் கூறிய எடியூரப்பா, ‘ ‘நானே அடுத்த  இரண்டு ஆண்டிற்கும் முதல்வர்,’ என்று நேற்று கூறியுள்ளார். கட்சியினர், ஆதரவாளர்களுக்கு தைரியம் ஊட்டும் வகையில் அவர் கூறினாலும், உட்கட்சி பூசல்களை அவரால் முற்றிலும் தடுக்க முடியவில்லை. இதற்காக, இம்மாநில  பாஜ மேலிட பொறுப்பாளர் அருண் சிங்கை அனுப்பியுள்ள கட்சி மேலிடம், அதிருப்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டுள்ளது.

ஒருவேளை இவரின் முயற்சி  தோல்வி அடைந்து விட்டால், வரும் காலங்களில் கட்சியை எப்படி கட்டுக்கோப்பாக  கொண்டு செல்வது, அதற்கு யார் தகுதியானவர்கள் என்பதை  பட்டியல் தரும்படி மேலிடம் அவருக்கு உத்தரவிட்டுள்ளது.  இந்நிலையில், இந்த மாதத்திற்குள் இந்த  சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க திட்டமிட்டுள்ள பிரதமர் மோடி, கர்நாடகாவை சேர்ந்த  மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவை நேற்று தனது வீட்டிற்கு அழைத்து ரகசிய  ஆலோசனை நடத்தியுள்ளார். இதற்காக டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் அலுவலக  இல்லத்திற்கு சென்ற சதானந்த கவுடா, சுமார் 15 நிமிடத்திற்கு  மேலாக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதில்,  கர்நாடக  அரசியலில் தற்போது உள்ள சூழ்நிலை பற்றி ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால், முதல்வர் எடியூரப்பாவின் பதவி பற்றி கேள்விக்குறி எழுந்துள்ளது.

உபி.யை தொடர்ந்து கர்நாடகா

உத்தர  பிரதேசத்தில் பாஜ முதல்வர் யோகி ஆதித்தியநாத் மீது  உட்கட்சியிலேயே பல்வேறு குற்றச்சாட்டுகள் சமீபத்தில் முன் வைக்கப்பட்டது. இதையடுத்து,  பிரதமர் மோடி அவரை நேரில் அழைத்து  விசாரித்தார். அதேபோல், கர்நாடகாவிலும் முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

Related Stories: