மம்தாவின் அதிரடி அரசியலால் மேற்கு வங்க பாஜ.வில் குழப்பம்: 23 எம்எல்ஏ.க்கள் திரிணாமுல்லுக்கு தாவலா? கவர்னர் மாளிகை கூட்டம் புறக்கணிப்பு : ஆளுநர் டெல்லி விரைந்ததால் பரபரப்பு

கொல்கத்தா: சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு மம்தா பானர்ஜி செய்து வரும் அரசியலால், மேற்கு வங்க பாஜ.வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மம்தாவின் மீது ஆளுநரிடம் புகார் கொடுக்க சென்றபோது, 23 பாஜ எம்எல்ஏ.க்கள் வரவில்லை. இதனால், அவர்கள் திரிணாமுல் கட்சிக்கு தாவ திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சூழலில் ஆளுநர் டெல்லி விரைந்துள்ளதால் உச்சக்கட்ட பரபரப்பு எழுந்துள்ளது.  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பல்வேறு விவகாரங்களில் பிரதமர் மோடியுடன் நேரடியாக மோதி வருவதாலும், அவருக்கு எதிராக தேசிய அளவில் அணி திரட்டி வருவதாலும் மத்திய அரசுக்கும், அவருக்கும் இடையே மோதல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மம்தாவுக்கும் ஆளுநர் ஜெகதீப் தங்காருக்கும் இடையிலான மோதல் மேலும் தீவிரமாகி இருக்கிறது.

கடந்த ஆட்சியிலும் மம்தாவுக்கு அடிக்கடி குடைச்சல் கொடுத்து வந்த தங்கார், ‘சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு மேற்கு வங்கத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் ஆபத்தாக உள்ளது. திரிணாமுல் கட்சிக்கு எதிராக வாக்களித்தவர்களை காவல் துறை மூலம் ‘பழிவாங்கும் வன்முறை’ நடக்கிறது. சட்டத்திற்கு பயப்படாததால் பாலியல் பலாத்காரங்களும், கொலைகளும் நடந்து வருகின்றன. இது தொடர்பாக எடுத்துள்ள நடவடிக்கைகளை நாளை (இன்று) நேரில் வந்து விளக்கும்படி தலைமைச் செயலாளர் எச்.கே.திவேதிக்கு உத்தரவிட்டு உள்ளேன்,’ என பகிரங்கமாக டிவிட்டரில் ஆளுநர் தெரிவித்தது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பான சூழலில்,திரிணாமுலில் இருந்து பாஜவுக்கு தாவி எதிர்க்கட்சி தலைவராகி உள்ள சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜ எம்.எல்.ஏ.க்கள் நேற்று முன்தினம் கவர்னர் ெஜகதீப் தங்கரை சந்தித்தனர். இம்மாநிலத்தில் பாஜ.வுக்கு 74 எம்எல்ஏ.க்கள் உள்ளனர்.

 ஆனால், சுவேந்து அதிகாரியுடன் கவர்னரை சந்திக்க 51 பாஜ எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே வந்தனர். இக்கட்சியை சேர்ந்த 23 எம்.எல்.ஏ.க்கள் இந்த சந்திப்பில் பங்கேற்காததால், அவர்கள் திரிணாமுல் கட்சிக்கு தாவ உள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதால் பாஜ தலைவர்கள் கிலியில் உள்ளனர். அடுத்த வரும் நாடாளுமன்ற தேர்தல், 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கும் மம்தா இப்போதே தீவிரமாக தயாராகி வரும் நிலையில், கட்சியை மேலும் வலுப்படுத்த அதிரடி அரசியல் ஆட்டத்தை தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இம்மாநில பாஜ ஆட்டம் கண்டு, குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது. இந்நிலையில், ஆளுநர் ஜெகதீப் தங்கார் நேற்று முன்தினம் மாலை திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார். வரும் வெள்ளிக்கிழமை மாலைதான் அவர் கொல்கத்தா திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அவர் கொல்கத்தா திரும்பிய பின் அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்படலாம் என கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

மிதுன் சக்ரவர்த்தியிடம் போலீஸ் விசாரணை

‘நான் அடித்தால் உன் உடல் சுடுகாட்டில் கிடக்கும். ஒரு பாம்பு கடி உன்னை புகைப்படமாக மாற்றி விடும்,’ என்று கொல்கத்தாவில் நடந்த பேரணியில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக நடிகரும், பாஜ பிரமுகரும், பிரபல நடிகருமான மிதுன் சக்ரவர்த்தி மீது போலீசார் வழக்குப் பதிந்து செய்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக ஐகோர்ட் போட்ட உத்தரவின்படி, புனேவில் உள்ள மிது சக்ரவர்த்தியிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் வடக்கு கொல்கத்தா மாணிக்டாலா காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். அவர் அளித்த வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்டனர்.

கொல்கத்தாவுக்குதிரும்பி வராதே...

டெல்லிக்கு ஆளுநர் ஜெகதீப் தங்கார் சென்றுள்ளது பற்றி திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவர் சவுகதா ராய் கூறுகையில், ‘‘அரசியலமைப்பு சட்டத்தை ஒட்டு மொத்தமாக மீறி, சீர்குலைக்கும் வகையில் ஆளுநர் செயல்பட்டுள்ளார்,’’ என்று குற்றம்சாட்டினார். இக்கட்சி பெண் எம்பி மருவா மொய்த்ரா, ‘ஆளுநர் தங்கார் மீண்டும் கொல்கத்தாவுக்கு திரும்பி வரக் கூடாது...’ என ஆவேசமாக கூறி உள்ளார்.   

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய முகுல்ராய் மறுப்பு

சட்டமன்ற தேர்தலில் பாஜ சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏ.வான முகுல் ராய், சில நாட்களுக்கு முன் மீண்டும் திரிணாமுல் கட்சியில் சேர்ந்தார். இந்நிலையில், முகுல்ராய் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி வலியுறுத்தி இருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள முகுல் ராய், ‘எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யமாட்டேன்’ என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Related Stories:

>