பிளஸ் 2 மாணவர்களுக்கு இறுதி தேர்ச்சி மதிப்பெண் வகுப்பது குறித்து 10 பேர் கொண்ட குழு அமைப்பு: பள்ளி கல்வி ஆணையர் உத்தரவு

சென்னை: பிளஸ் 2 மாணவர்களுக்கான இறுதி தேர்ச்சி மதிப்பெண்களை மதிப்பீடு செய்வதற்காக ஒரு குழுவை பள்ளிக் கல்வி ஆணையர் அமைத்து  உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. தொடர்ந்து நீட்டிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக பொதுத் தேர்வுகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் அனைத்து பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.  இந்நிலையில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்ச்சி மதிப்பெண்கள் மதிப்பீடு என்பது 9ம் வகுப்பில் அவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்டையில் மதிப்பிட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. பிளஸ் 2 மாணவர்களுக்கா மதிப்பீடு எப்படி என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. இருப்பினும், பிளஸ் 2 தேர்ச்சி மதிப்பெண்கள் 9ம்  வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும் என்று தெரிகிறது.

இந்நிலையில்தான், பிளஸ் 2 மாணவர்களுக்கு  இறுதி தேர்ச்சி மதிப்பெண்கள் வழங்கும் வகையில் ஒரு குழுவை பள்ளிக் கல்வி ஆணையர்  நியமித்துள்ளார். அந்த  குழுவில் 10 பேர் இடம் பெற்றுள்ளனர். அதன் விவரம் வருமாறு. கடந்த 2020-2021ம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவித்தது. மேலும், அந்த மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்க  குழு அமைக்கப்படும். அதன் அடிப்படையில் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை நடக்கும். அதன்படி தற்போது மதிப்பெண்கள் வழங்க குழு அமைக்கப்பட்டுள்ளது.  அதில், 3 மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் 7 மற்ற பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.  

அதன்படி திருப்பூர் ஜெய்வாபாய் மாதிரி நகராட்சி பெண்கள் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஸ்டெல்லா அமலோர்பவ மேரி, திருநெல்வேலி சங்கர் உதவி பெறும் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன், சென்னை ஆழ்வார் திருநகர் சுயநிதி செயின்ட் ஜான் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜேம்ஸ் சத்தியராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் 7 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் பிளஸ் 2 மாணவர்களுக்கான இறுதி மதிப்பெண்கள் குறித்து ஆக்கப்பூர்வமான  ஆவணங்களின் அடிப்படையில் ரகசிய முறையில் மதிப்பீடுகளை செய்ய வசதியாக தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: