கோயில் சார்பாக நடக்கும் வழக்குகளுக்கு வழக்கறிஞரை நியமனம் செய்ய கமிஷனரின் ஒப்புதல் அவசியம்: தமிழக அறநிலையத்துறை உத்தரவு

சென்னை: தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உத்தரவை தொடர்ந்து ஆணையர் குமரகுருபரன் அனைத்து கோயில் அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் முன் அனுமதி பெறாமல்,  கோயில் நிர்வாகத்தால் தன்னிச்சையாக வழக்கறிஞர்கள் முறையாக வழக்கினை நடத்தாது ஆணையரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, கோயில் சார்பாக வழக்குகளை நடத்திட வழக்கறிஞர்கள் நியமனம் செய்வதை ஒழுங்குப்படுத்திட அறிவுரைகள் வழங்கப்படுகிறது.

* நீதிமன்றங்களில் கோயில் சார்பாக முன் அனுமதி பெற்று வழக்கினை தாக்கல் செய்யவும், கோயிலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை திறம்பட நடத்திடவும், வழக்கின் தன்மை, வழக்கில் அடங்கிய சட்ட சிக்கல்கள் அல்லது செய்ய வேண்டிய பணிகளின் விவரம், வழக்கறிஞர் ஊதியம் முதலிய விவரங்களுடன் விரிவான அறிக்கையினை சம்பந்தப்பட்ட உதவி ஆணையர்/இணை ஆணையர் மூலமாக ஆணையருக்கு அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும்.

* வழக்கறிஞரின் அனைத்து விவரங்களையும் அளிக்க வேண்டும்.

* ஒழுங்குமுறை கட்டணம் அல்லது நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட்ட ஊதியத்தில் அதிகமானதை தர வேண்டும். வழக்கறிஞர் கட்டண பட்டியலை ஆணையருக்கு அனுப்ப வேண்டும்.

* வழக்கு முடிவடைந்து நீதிமன்ற தீர்ப்புரை மற்றும் தீர்ப்பாணை சான்றிட்ட நகல் பெறப்பட்ட பின்னரே முழு ஊதிய தொகை கொடுக்கப்பட  வேண்டும்.

* அதிகமாக ஊதியம் கொடுக்க உத்தேசித்தால் அதற்கான காரணத்தை தெரிவித்து ஆணையரின் அனுமதி பெற வேண்டும்.

* ஆணையரின் முன் அனுமதியின்றி நீதிமன்றங்களில் எந்தவிதமான ஒப்பந்தம் அல்லது உறுதிமொழியையும் அளிக்க கூடாது. ஆணையர் அனுமதியின்றி நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளில் இணக்க தீர்வு அல்லது திரும்ப பெறுதல் ஏதும் மேற்கொள்ளக் கூடாது.

Related Stories:

>