பிளஸ் 2 தேர்வு ரத்து எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு; அரசு பதில்தர உத்தரவு

சென்னை: பிளஸ் 2 தேர்வு ரத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதில் தருமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல வழக்கில், கொரோனா இரண்டாவது அலை பரவி வருவதைக் கருத்தில் கொண்டு ஜூன் 1ம் தேதி மத்திய அரசின் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து தமிழக அரசும் கடந்த ஜூன் 5ம் தேதி 12ம் வகுப்பு தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து மதிப்பெண்கள் வழங்க உரிய வழிமுறைகளை வெளியிட குழு ஒன்றை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு மார்ச் 25 முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது இந்தியாவில் சிபிஎஸ்இ, சிஐஎஸ்இ மற்றும் அனைத்து மாநில கல்வி இயக்கங்களும் பன்னிரண்டாம் வகுப்புகளை நடத்தி முடித்து இருந்தனர். அதனால் அனைத்து வகையான மேல் படிப்புகளுக்கும் அவர்களின் பள்ளி இறுதித் தேர்வின் அடிப்படையில் தான் சேர்க்கை நடைபெற்றது.

கடந்த ஆண்டில் செப்டம்பர் 13ல் நீட் நுழைவுத் தேர்வும், செப்டம்பர் முதல் வாரத்தில் ஐஐடிக்கான நுழைவுத் தேர்வும் நடைபெற்றது. மேற்படிப்பு வகுப்புகளின் கல்வி சேர்க்கை தகுதியை நிர்ணயம் செய்து மேற்படிப்பு கல்வி நிறுவனங்களை நெறிப்படுத்தும் யுஜிசி, மெடிக்கல் கவுன்சில், ஏஐசிடிஇ, நர்சிங் கவுன்சில், டெண்டல் கவுன்சில், பார் கவுன்சில் உடன் கலந்து முடிவு எடுக்காமலும்  தமிழ் நாடு அரசின் கல்வித் துறை பன்னிரெண்டாம் வகுப்பு இறுதித் தேர்வை ரத்து செய்துள்ளது.கொரோனா பரவல் குறைந்து வரும் சூழலில் இன்னும் ஓரிரு மாதங்கள் பொறுத்திருந்திருக்கலாம். 12ம் வகுப்பு தேர்வு ரத்து செய்ததை கைவிட்டு விட்டு மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஒவ்வொரு செமஸ்டரும் 180 நாட்கள் என்பதை 160 நாட்கள் அல்லது 170 நாட்களாக குறைப்பதன் மூலம் கிடைக்கும் கால அளவை தற்போது பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.  

எனவே, தமிழக அரசு உடனடியாக கல்வியாளர்களை கொண்டு ஒரு குழு உயர்கல்விகளை நெறிப்படுத்தி வரும் யூஜிசி, மெடிக்கல், டெண்டல், நர்சிங் கவுன்சில், ஏஐசிடிஇ மற்றும் பார்கவுன்சில் உடன் கலந்து ஆலோசித்து பிளஸ் 2 தேர்வை ரத்து செய்யாமல் சிறப்பு வகுப்புகள் நடத்தி ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு பிறகு 12ம் வகுப்பு தேர்வை நடத்தலாம் என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு பதில் தருமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.

Related Stories:

>