கோவிஷீல்டு தடுப்பூசி போடும் இடைவெளி காலம் குறைப்பா? குழப்புகிறது மத்திய அரசு

புதுடெல்லி: கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்களுக்கான இடைவெளி 4-6 வாரங்களில் இருந்து 12-16 வாரங்களாக அதிகரிக்கப்பட்டது. ஆனால் இதுபோல் அதிக இடைவெளியால் தடுப்பூசி செயல்திறன் குறைவாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது குறித்து  தேசிய தடுப்பூசி தொழில்நுட்ப ஆலோசனை குழு தலைவர் என்.கே.அரோரா, அளித்த பேட்டியில், ‘‘இங்கிலாந்தின் சுகாதார துறை நிர்வாக முகமை வெளியிட்ட தரவுகளின்படி, 12 வாரங்கள் இடைவெளி இருக்கும்போது தடுப்பூசியின் செயல்திறன் 65% - 88% வரை இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே தடுப்பூசி இடைவெளி நிர்ணயிக்கப்பட்டது. அதே சமயம், மீண்டும் 4 அல்லது 8 வார இடைவெளியாக மாற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. இடைவெளி குறைப்பதால் 5-10 சதவீத செயல்திறன் கூடுதலாக கிடைக்கும்.’’ என்றார். இது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.  

18-45 வயதினருக்கு முன்பதிவு தேவையில்லை

வரும் 21ம் தேதி முதல் 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், இவர்கள் அனைவரும் மத்திய அரசின் ‘கோ-வின்’ இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டு இருந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதை்்யடுத்து,  மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி மையங்களுக்கு சென்று, அதே இடத்தில்  கோ-வின் இணையத்தளத்தில் பதிவு செய்துவிட்டு தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம்,’ என கூறப்பட்டுள்ளது.

கோவாக்சினா?  கவ்-வாக்சினா?

கோவாக்சின் தடுப்பூசியில் புதிதாகப் பிறந்த கன்றுகுட்டியின் ரத்தத்தில் இருந்து எடுக்கப்படும் ‘சீரம்’ திரவம் கலக்கப்படுவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின.  இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அளித்துள்ள விளக்கத்தில், ‘வெரோ செல்கள் தயாரிக்கவும் வளர்ச்சிக்கும் மட்டுமே கன்றுக்குட்டியின் சீரம் பயன்படுத்தப்படுகிறது. இந்த நுட்பம் போலியோ, ரேபிஸில், இன்ப்ளூயன்ஸா போன்ற தடுப்பூசி உற்பத்திகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த வெரோ செல்கள் வளர்ச்சியடைந்த பின், அதிலிருக்கும் கன்று சீரத்தை நீக்க, ரசாயனங்களில் கழுவப்படுகின்றன. இறுதி தடுப்பூசியில் கன்றுக்குட்டியின் சீரம் இருப்பதில்லை’ என கூறப்பட்டுள்ளது.

மும்பையில் போலி தடுப்பூசி போடப்பட்டதா?

மும்பை காந்திவலி மேற்கு பொய்சரில் ஹிராநந்தனி ஹெரிடேஜ் ஹவுசிங் சொசைட்டி உள்ளது. இங்குள்ள 3 அடுக்குமாடி குடியிருப்புகளில் 435 வீடுகள் உள்ளன. இங்கு கடந்த மாதம் 30ம் தேதி தடுப்பூசி முகாம் நடந்தது. இதில் பிரபல மருத்துவமனை மூலம் முகாம் நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. . குடியிருப்புவாசிகள் 390 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். ஆனால் தடுப்பூசி போட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கவில்லை .சில மருந்து குப்பிகளில் தடுப்பூசி விற்பனைக்கு அல்ல என்று குறிப்பிடப்பட்டிருந்தது.இதனால்,  போலி தடுப்பூசி போடப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து குடியிருப்பு வாசிகள் போலீசில் புகார் செய்துள்ளனர்.

Related Stories:

>