40 ரூபாய் கடனுக்காக வாலிபர் குத்திக்கொலை: நண்பன் கைது

திருவொற்றியூர்: மாதவரம் உடையார் தோட்டம் 1வது தெருவை சேர்ந்தவர் மணி (எ) மணிகண்டன்(25). வெல்டிங் கடையில் பணிபுரிந்து வந்தார்.  நேற்று காலை மணிகண்டன் அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் நாகமுத்து மற்றும் நண்பர்கள் 10 பேருடன் உடையார் தோட்டம் பகுதியில் மது அருந்தினார்.

பின்னர் சில மணி நேரம் கழித்து போதை அதிகமானதால் அவருடைய நண்பர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இறுதியாக நாகமுத்துவும் மணிகண்டனும் ஒன்றாக தொடர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தனர். இருவருக்கும் போதை அதிகமான நிலையில் மணிகண்டன் சில தினங்களுக்கு முன்பு நாகமுத்துவிற்கு கொடுத்த 40 ரூபாயை திருப்பி கேட்டதால்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஆத்திரமடைந்த நாகமுத்து அருகில் இருந்த கறி கடைக்கு சென்று அங்கே வைக்கப்பட்டிருந்த கறி வெட்டும் கத்தியை எடுத்து வந்து மணிகண்டனை சரமாரியாக தொடை பகுதியில் பலமாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனால்  ரத்தம் வெளியேறி அலறித் துடித்தபடியே மணிகண்டன் அதே இடத்தில் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். புகாரின்பேரில் மாதவரம் போலீசார் நாகமுத்துவை கைது செய்தனர்.

Related Stories:

>