முன்விரோதத்தில் ரவுடி வெட்டிக்கொலை 6 மணி நேரத்தில் 4 பேர் கைது: போலீஸ் அதிரடி

சென்னை: தாம்பரம் சானடோரியம் துர்க்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கருப்பு (எ) வடிவழகன் (27). ரவுடி. சூளைமேடு நமச்சிவாயபுரத்தில் நேற்று முன்தினம் மாலை நண்பர்களுடன் மதுகுடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக சேத்துப்பட்டு செனாய் நகர் முத்தியப்பன் தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 7 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை ஓடஓட விரட்டி கொடூரமாக வெட்டி படுகொலை செய்தது. தகவலின்பேரில் சேத்துப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணை யில் கடந்த 2015ம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில்வே தண்டவாளத்தில் சைத்தான் (எ) சுரேஷ் என்ற ரவுடி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடிகளான ரஜினி, கடுகு, பட்டு (எ) பார்த்திபன், மூக்கு பீ (எ) ஸ்டீபன் ஆகியோர் சிறையில் இருந்தபோது, பட்டு (எ) பார்த்திபனுக்கும் ஏற்கனவே சிறையில் இருந்த ரவுடி பாம்பு (எ) வினோத் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் பாம்பு (எ) வினோத் தனது நண்பரான தற்போது கொலை செய்யப்பட்ட கருப்பு (எ) வடிவழகன் உதவியுடன் ரவுடி பட்டுவை கொலை செய்ய முடிவு ெசய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான முயற்சியும் நடந்துள்ளது. இதற்கிடையே நண்பர்களாக இருந்த வினோத்திற்கும் ரவுடி வடிவழகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.  ஆத்திரமடைந்த வடிவழகன், வினோத்தை கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். தன்னை ரவுடி வடிவழகன் கொலை செய்வதற்குள் அவனை கொலை செய்ய திட்டமிட்டு நண்பர்கள் மூலம் மது குடிக்க தாம்பரத்தில் இருந்து வரவழைத்து ரவுடி வினோத் கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக சூளைமேடு மூக்கு பி (எ) ஸ்டீபன், மதுரவாயல் பாம்பு (எ) வினோத் (23), சூளைமேடு ரஜினி (45), அப்பு (எ) அருள்முருகன் (19) ஆகிய 4 பேரை 6 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.

Related Stories: