5 தூண்கள் அடிப்படையில் முதலீடு செய்ய வாருங்கள்: உலக நாடுகளுக்கு மோடி அழைப்பு

புதுடெல்லி: ‘திறமை, சந்தை, மூலதனம், சூழல் அமைப்பு மற்றும் வெளிப்படையான கலாச்சாரம் ஆகிய ஐந்து தூண்களின் அடிப்படையில் இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளை அழைக்கிறேன்,’ என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.   ஐரோப்பிய நாடுகளின் மிகப்பெரிய டிஜிட்டல், புதுமை கண்டுபிடிப்புகளுக்கான அறிவியல் தொழில்நுட்ப மாநாடு, ‘விவாடெக்’ என்ற பெயரில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று தொடங்கியது. இதில் சிறப்பு அழைப்பாளராக பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று பங்கேற்று பேசியதாவது:   கடந்த ஆண்டு, நாங்கள் பல்வேறு துறைகளில் பெரும் இடையூறுகளை சந்தித்தோம், அதில் பெரும்பாலானவை இன்னும் உள்ளன. ஆனாலும், இடையூறு என்பது விரக்தியைக் குறிக்க வேண்டியதில்லை. மாறாக, சீர்படுத்துதல் மற்றும் தயார்படுத்துதல் ஆகிய இரட்டை அடித்தளத்தின் மீது நாம் கவனம் செலுத்த வேண்டும்.

இந்திய அரசு தொடர்ந்து பல சீர்த்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தல், சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்துதல் போன்றவைகளுக்கு மத்தியிலும் இந்திய அரசாங்கம், சுரங்கத்தில் இருந்து விண்வெளி வரை, வங்கி முதல் அணுசக்தி வரை பல துறைகளில் பெரும் சீர்திருத்தங்களை செயல்படுத்தியது.   பல வழக்கமான முறைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டாலும், மீட்புக்கு உதவியது புதுமைகள் என்றே சொல்ல வேண்டும். கொரோனா 2வது அலையிலிருந்து இந்தியா விடுபட்டு வரும் நிலையில், பொருளாதாரம் மற்றும் சுகாதார கட்டமைப்பை சீரமைத்து எதிர்கால சவால்களை சந்திக்க தயார்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும்  திறமை, சந்தை, மூலதனம், சூழல் அமைப்பு மற்றும் வெளிப்படையான கலாச்சாரம் ஆகிய ஐந்து தூண்களின் அடிப்படையில் இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளை அழைக்கிறேன்.

 இந்தியாவில் 118 கோடி மொபைல் போன்களும் 77.5 கோடி இணைய பயனர்களும் உள்ளனர். இது பல நாடுகளின் மக்கள் தொகையை விட அதிகம்.  மேலும், சமூக ஊடகங்களை அதிகம் பயன்படுத்துபவர்கள் இந்தியர்கள். எனவே, ஒரு மாறுபட்ட மற்றும் விரிவான சந்தை உங்களுக்கு காத்திருக்கிறது. அனைவருக்கும் இன்னும் கூடுதலான, அக்கறையுள்ள மற்றும் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பு இது.   இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

6 வயது குழந்தையின் தாய்க்கு பாராட்டு உபி மாநிலம், காஜியாபாத்தை சேர்ந்த பூஜா வர்மா, அவரது கணவர் ககன் கவுசிக் இருவருக்கும் கடந்த ஏப்ரலில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. உடனடியாக, அவர்கள் மூன்று படுக்கை அறை கொண்ட தங்கள் வீட்டில் தனித்தனி அறைகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர். மேலும், தங்களின் 6 வயது மகனையும் தனி அறையில் தனிமைப்படுத்தினர். குழந்தையை பிரிந்த தாய்மையின் வேதனை குறித்து பிரதமர் மோடிக்கு அவர் கவிதை அனுப்பினார். இதற்காக பூஜாவை பாராட்டி மோடி எழுதியுள்ள கடிதத்தில், ‘இக்கட்டான சமயத்தில் பொறுமையுடனும் தைரியமாகவும் முடிவெடுத்த பூஜா எதிர்காலத்தில் எந்த சவாலையும் சமாளிக்கும் திறன் பெற்றவர், என பாராட்டியுள்ளார்.

Related Stories:

>